search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை நடக்கிறது
    X

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை நடக்கிறது

    • ஆகஸ்டு 8-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • ஆடித்தபசு திருவிழா ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலும் ஒன்று.

    சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.

    விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் திருநாளான ஆகஸ்டு 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா பதினோறாம் திருநாளான ஆகஸ்டு 10-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவையொட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையதுறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×