search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    வழிபாட்டுக்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் திரண்டனர். அவர்கள், 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதமான மார்கழியில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கொரோனா, ஒமைக்ரான் தொற்று தற்போது அதிக அளவு பரவ தொடங்கி உள்ளது. இதையடுத்து, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    மேலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து வருகின்றன.

    இதன் காரணமாக கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன் எதிரொலியாக நேற்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாதயாத்திரை பக்தர்களின் கூட்டமும், வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடம் நிரம்பியது. இதனால் வாகனங்கள் அனைத்தும் கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுளம் அருகில் உள்ள சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
    Next Story
    ×