search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமியும், அம்பாளும் பு‌‌ஷ்பக விமானத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 26-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் மங்கள இசை, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன. இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பு‌‌ஷ்பக விமானத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நகைச்சுவை திரையிசை பட்டிமன்றம், இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பு‌‌ஷ்பக விமானத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சுவாமி பூதவாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி வருதல், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், 9.30 மணிக்கு மக்கள்மார் அழைப்பு, இரவு 10 மணிக்கு கன்னிவிநாயகர் சுப்பிரமணியசாமி மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந் தேதி காலை 6 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமியும், அம்பாளும் ரி‌‌ஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெற உள்ளது. தினமும் காலையிலும், இரவிலும் வாகன பவனி நடக்கிறது.

    விழாவின் 9-வது நாளான 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி தடம் பார்க்க எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பிறகு 7.45 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறைக்கு ரி‌‌ஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறையில் இருந்து மேளதாளங்களுடன் பவனி வருதல் உள்ளிட்டவை நடக்கின்றன.
    Next Story
    ×