search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவத்தின்போது மலையப்பசாமி, நாச்சியார்கள் மீது பூப்பந்துகளை வீசிய காட்சி.
    X
    உற்சவத்தின்போது மலையப்பசாமி, நாச்சியார்கள் மீது பூப்பந்துகளை வீசிய காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பிரணய கலகோற்சவம் நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி மீது ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பூப்பந்துகளை வீசி கோபம் தணிந்து கோவிலுக்குள் சென்றனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாள் பிரணய கலகோற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது.

    அதற்காக மாலை 4 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி தனியாக தங்கத்திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதேபோல், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பக்தர்களின் குறைகளை போக்குவதில் ஆர்வம் காட்டும் ஏழுமலையான், நாச்சியார்களை கண்டு கொள்வதில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்பசாமி சமாதானப்படுத்தும் நிகழ்ச்சியாக பிரணய கலகோற்சவம் நடத்தப்படுகிறது.

    உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, ஸ்ரீவாரிபுஷ்கரணியை அடுத்த வாரகசாமி கோவில் அருகில் எதிர் திசையில் வந்தார். அப்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி தனியாக எதிர் திசையில் கொண்டு வரப்பட்டனர்.

    தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்சுவாமிகள், வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் இரு தரப்பினரும் எதிர் எதிர் திசையில் நின்றனர். பின்னர் மலையப்பசாமி தரப்பில் ஜீயர்சுவாமிகள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்கள், நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை பாராயணம் செய்து தாயார்களை சமாதானப்படுத்தினர்.

    அப்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பில் 3 முறை பூப்பந்துகளை மலையப்பசாமி மீது வீசினர். அப்போது மலையப்பசாமி தான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனக் கெஞ்சியபடி தப்பிக்க மலையப்பசாமி பின்னால் சென்று, தாயார்களை சமாதானப்படுத்திய நிகழ்ச்சி நடந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சமாதானம் ஆனதும் உற்சவர் மலையப்பசாமியுடன் சேர்ந்தனர். அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, ஆஸ்தானம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    பிரணய கலகோற்சவத்தில் திருமலை-திருப்பதி தேஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×