search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்
    X
    ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்

    ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்

    ராமேசுவரம் கோவிலில் நடந்த ஆருத்ரா திருவிழாவில் தங்க கவசம் சாத்தப்பட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    ராமேசுவரம் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதையொட்டி நேற்று அதிகாலை 2.30 மணிஅளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிவரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாமிஅம்பாளுக்கு பால், பன்னீர், தேன், மாபொடி, மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கோவிலின் சாமி சன்னதியில் இருந்து தங்ககேடயத்தில் மாணிக்கவாசகர் நடராஜர் சன்னதி எதிரே எழுந்தருளினார். அப்போது கோவில் யானை ராமலட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது. அப்போது யானை ராமலட்சுமி தன் துதிக்கையால் மாணிக்கவாசகரை வணங்கியது.

    தொடர்ந்து நடராஜர் சன்னதி முன்பு அமைக்கப்பட்டு இருந்த 7 திரைகள் திறக்கப்பட்டு கடைசியாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்த நடராஜர் காட்சி தந்தார். அவருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு மகாதீபஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

    கோவிலின் இணை ஆணையர் கல்யாணி, உதவிகோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நடராஜருக்கு பூஜைகளை கணேஷ் மற்றும் ஸ்ரீராம்குருக்கள் ஆகியோர் செய்தனர்.

    ராமேசுவரம் கோவிலில் நேற்று ஆருத்ரா திருவிழாவையொட்டி நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகத்தை காண நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். .ஆனால் பக்தர்களை திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காததால் அதிகாலை 5 மணி வரையிலும் காத்திருக்க வைத்ததால் பரபரப்பு நிலவியது. பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி காத்திருந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு 3-ம் பிரகாரத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டனர். அதன் பின்னரே நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை கண்டு தரிசனம் செய்து சென்றனர்.

    ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் எதிரே கோசுவாமி மட வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நடராஜருக்கும் நேற்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை, பூஜை நடைபெற்றது.

    பூஜையில் தமிழக விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம்ஜி, பொதுச் செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் ராமசுப்பு ஓட்டல் ஆர்யாஸ் உரிமையாளர் வெங்கடேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×