இந்த 2020ம் ஆண்டு நிச்சயமாக எல்லோரும் விரும்பும் ஒரு ஆண்டாக அமையவில்லை. இந்த ஆண்டு கொரோனாவால் ரத்துசெய்யப்பட்ட, களையிழந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
கொரோனாவால் ஆரவாரமின்றி அரங்கேறிய ஆன்மிக நிகழ்வுகள்
இந்த 2020ம் ஆண்டு நிச்சயமாக எல்லோரும் விரும்பும் ஒரு ஆண்டாக அமையவில்லை. இந்த ஆண்டு கொரோனாவால் ரத்துசெய்யப்பட்ட, களையிழந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த 2020ம் ஆண்டு நிச்சயமாக எல்லோரும் விரும்பும் ஒரு ஆண்டாக அமையவில்லை. கொரோனா வைரஸ் அனைவரையும் பாடாய் படுத்திவிட்டது. பாமரர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த ஆண்டு கொரோனாவால் ரத்துசெய்யப்பட்ட, களையிழந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
மார்ச்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. மார்ச் 23-ம் தேதி கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு அறிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பெரும்பாலான இந்து கோவில்களில் கோவில் குருக்கள் மட்டும் பூஜைகள் நடத்தினர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில், தர்கா, கிறிஸ்துவ ஆலயங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
ஏப்ரல்
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல்12-ந் தேதி கொண்டாடப்பட்டது
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் கிறிஸ்தவர்கள் கவலை அடைந்தனர்.
மே மாதம்
மதுரை சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரையில் மதுரை திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. மே 4-ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி 4 பட்டாச்சாரியர்கள் மட்டும் நடத்தி திருக்கல்யாண உற்சவம் இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கள்ளழகர் கோயில் சித்திரை விழா மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் சமூக இளைவெளி பின்பற்றுவது கட்டாயம். இந்த சூழலில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, எதிர்சேவை உள்ளிட்ட முக்கிய விழா நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்ததால் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
எனினும், பக்தர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் இருக்கும் பொருட்டும், திருக்கோயில் பட்டாச்சாரியாளர்கள் கருத்துருவின்படி வரும் மே 8-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. www.tnhrce.gov.in என்ற இணையதளத்திலும், youtube மற்றும் முகநூல் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஜூலை
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடு தான் நினைவுக்கு வரும். பிரதான வீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் முன்பு பக்தர்கள் கூழ் வார்த்து அதை பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் ஆடி மாதம் வழிபாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனாலும் பக்தர்கள் கோவில்கள் முன்பு நின்று அம்மனை வழிபட்டனர். கோவில் வாசலிலேயே கற்பூரம் ஏற்றியும், மாவிளக்கு படைத்தும், கூழ் வார்த்தும் வழிபட்டு வந்தனர்.
ஆகஸ்டு
கொரோனா ஊடங்கு ஆகஸ்ட் மாதமும் தொடர்ந்த காரணத்தால் பண்டிகைகள் கொண்டாட தடை இருந்தது. என்றாலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும் பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதையும், பொது மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஊரடங்கு உத்தரவுக்கு உட்பட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
செப்டம்பர்
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசையில் புனித நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் பொதுமக்கள் அதிகம் பேர் கூட தடைஇருந்தது. மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் செய்வதற்கும், அக்னி தீர்த்தம் உள்பட கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித தீர்த்தங்களில் நீராடவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதே போல் கன்னியாகுமரி, திருச்சியில் உள்ள நீர் நிலைகளிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிப்பட்டிருந்தது. மகாளய அமாவாசை அன்று, தர்ப்பணம் கொடுக்கவோ, புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர்.
அக்டோபர்
கொரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் ஆகஸ்டு மாதம் முதல் அனுமதிக்கப்பட்டனர். நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனத்துக்கு ஆன்-லைனில் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்கள் தங்குவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன. தினமும் 2 ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 20-ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் வீடுகளில் விதவிதமாக கொலுபொம்மைகளை அலங்கரித்து வைத்து முப்பெரும் தேவியரை தங்கள் இல்லத்திற்கு வரவழைத்து வழிபாடு செய்வார்கள். பத்தாவது நாள் வெற்றித்திருநாள் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படும். வடமாநிலங்களில் இதே பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நவராத்திரி பண்டிகையின் அனைத்து நாட்களிலும் கோவில்களிலும், வீடுகளிலும் அம்மன் பாடல்கள் பாடி கொலு பொம்மைகள் வைத்து குழந்தைகளுக்கு பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கி கொண்டாடுவார்கள்.
இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்ததால் நவராத்திரி பண்டிகை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் கொலு மண்டபம் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 10 நாட்கள் திருவிழாவாக நடக்கும் நவராத்திரி திருவிழா இந்த ஆண்டு எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் நடந்தது.
நவம்பர்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவ.14-ம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளன்று வழக்கமாக காணப்படும் ஆரவாரத்தை இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்றே குறைத்துவிட்டது. கொரோனா பாதிப்பு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் தொடர் மழை என பல காரணங்களால் 2020ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை எல்லோருக்கும் இனிப்பாக அமையவில்லை. இதேபோல் தீபாவளி திருநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். முந்தைய ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு மக்கள் வருகை குறைந்தது.
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருசெந்தூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்க பக்தர்கள் அனுமதியளிக்கப்படவில்லை. அதே போல கோவில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கவும் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் கோவிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழாவை காண பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
டிசம்பர்
பெருமாள் கோவில்களில் டிசம்பர் 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனிபகவானின் நளன் குளத்தில், கொரோனா காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் பக்தர்கள் கோவிலுக்கு வர ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்படவில்லை.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.