search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றபோது எடுத்த படம்.

    கந்தசஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் தங்கி பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி மறுப்பு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாள் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முதல்நாள் சுவாமிக்கு காப்பு கட்டுதல் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கைகளில் காப்பு கட்டிக்கொள்வார்கள். மேலும் அவர்கள் கோவிலுக்குள்ளே 7 நாட்கள் தங்கி இருந்து தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மிளகு, துளசி மற்றும் பால் ஆகியவற்றை ஒரு வேளை சாப்பிட்டு விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இத்தகைய நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள்ளே உள் திருவிழாவாக கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனையடுத்து சண்முகர் சன்னதியில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல் கோலாகலமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல கம்பத்தடி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டது. மேலும் அங்கு அக்னி வளர்க்கபட்டு யாகசாலை பூஜை நடந்தது. சண்முகர் சன்னதியில் வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகத்துடன் கூடிய சண்முகார்ச்சனை நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை ஒரு முறை சுற்றி வலம் வந்தார். கடந்த காலங்களில் கந்த சஷ்டி திருவிழாவில் 6 முறை சுற்றி வலம் வருவது வழக்கம்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி(வியாழக்கிழமை) வேல் வாங்குதல், 20-ந்தேதி(வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம், 21-ந்தேதி(சனிக்கிழமை) மாலையில் பாவாடை தரிசனம் ஆகியவை நடக்கிறது. இந்த ஆண்டு முதன்முறையாக கோவிலுக்குள்ளே சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர்(பொ) ராமசாமி மற்றும் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அங்குள்ள மூலவர் சுவாமிக்கும், சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்களும் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். இவர்கள் கோவிலில் தங்கி இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகருக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடந்தது.

    இதைதொடர்ந்து உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், புஷ்பம், தேன் உள்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனை சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு உள்பிரகாரத்தில் நடந்தது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) மாலையில் காமதேனு வாகனத்திலும், நாளை(செவ்வாய்கிழமை) யானை வாகனத்திலும், 18-ந் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும், 19-ந் தேதி சப்பர வாகனத்திலும், 20-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. 21-ந் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×