search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கியதை படத்தில் காணலாம்.
    X
    நாகராஜா கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கியதை படத்தில் காணலாம்.

    நாகராஜா கோவிலில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினங்களில் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி, மஞ்சள் வைத்து வழிபடுவார்கள். அவ்வாறு வழிப்பட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    எனவே ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் வந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கி கொண்டதால் நாகராஜா கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கொட்டும் மழையில் நனைந்தபடி கோவிலுக்கு வந்தனர்.

    அரசு அறிவுறுத்தலின் படி அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோவில் நுழைவு வாயிலில் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    அதே சமயத்தில், கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள், பால் ஊற்றி வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் அவர்கள் கொண்டு வந்த பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பொடிகளை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். சிலர் கோவில் வளாகத்தில் வைத்து விட்டு சென்றனர்.
    Next Story
    ×