search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் 2 பெண்கள் மூடப்பட்ட நுழைவு வாயிலின் வெளியே நின்றபடி வணங்கியதை படத்தில் காணலாம்
    X
    பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் 2 பெண்கள் மூடப்பட்ட நுழைவு வாயிலின் வெளியே நின்றபடி வணங்கியதை படத்தில் காணலாம்

    நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு சிறப்பு வழிபாடு: பக்தர்கள் இன்றி நடந்தது

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    தமிழகத்தில் உள்ள நாகவழிபாட்டு தலங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முக்கியமானது. பரிகாரத்தலங்களில் ஒன்றாகவும் இந்த கோவில் விளங்குகிறது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதோடு, தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இதனால் தமிழ் மாதமான ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர்களும், கேரள மாநில பக்தர்களும் பெருமளவில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும், பெரிய கோவில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி இல்லை என்பதாலும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி இல்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிறான நேற்று சிறப்பு பூஜை, வழிபாடுகள் கோவிலில் நடைபெற்றன.

    அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, காலை 11.30 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. தந்திரிகள் பூஜை, அபிஷேகங்களை நடத்தினர். பக்தர்களுக்கு அனுமதி கிடையாததால், கோவில் ஊழியர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள்பொடி தூவி வழிபாடு செய்தனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நடைபெறும் சுவாமி புறப்பாடும் நேற்று இரவு நடந்தது.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது நேற்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவிலின் வெளியே நின்று வழிபட்டுச் சென்றனர். பலர் நாகர் சிலைகளுக்கு ஊற்றுவதற்காக பால் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை வாங்கி வந்தனர். அவர்கள் அதை கோவில் வாசலிலேயே வைத்துவிட்டுச் சென்றனர்.

    அவற்றை கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்று நாகர் சிலைகளுக்கு ஊற்றி வழிபாடு செய்தனர்.
    Next Story
    ×