search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமூக விலகலை பின்பற்றி மூலவர் ஏழுமலையானை வழிபட மகா துவாரம் வழியாக சென்றபோது எடுத்தபடம்.
    X
    சமூக விலகலை பின்பற்றி மூலவர் ஏழுமலையானை வழிபட மகா துவாரம் வழியாக சென்றபோது எடுத்தபடம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமூக விலகலை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் தினமும் வழக்கமாக அனைத்துப்பூஜைகளும் நடந்தன. 5-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது.

    அதன்படி 83 நாளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக நேற்று அனுமதிக்கப்பட்டனர். அலிபிரி டோல்கேட்டில் அனைத்துப் பக்தர்களுக்கும் சானிடைசர் தெளித்து கைகளில் தடவ செய்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம் அணிந்து வந்த பக்தர்களை தரிசனத்துக்காக திருமலைக்கு அனுப்பி வைத்தனர்.

    பக்தர்கள் திருமலையை அடைந்ததும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 6 அடி தூரத்தில் தரையில் போடப்பட்டுள்ள கட்டங்களில் பக்தர்களை அமர செய்தனர். அதைத்தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தரிசன பாதையில் வரும்போது சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

    பக்தர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் கவச உடை அணிந்த தேவஸ்தான பறக்கும்படை மற்றும் பாதுகாப்புப்படை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு மணிநேரத்துக்கு 500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் நேற்று 2 மணிநேரத்துக்கு 1,200 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியே வரும்போது, அவர்களின் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்ததும், கவுண்ட்டர்களில் 175 கிராம் எடையில் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டது.

    சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானக்கூடத்தில் இலவச உணவு வழங்கப்பட்டது. ஒரு ஹாலில் ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து உணவு சாப்பிடலாம். ஆனால் நேற்று ஒரு மேஜையின் இரு முனைகளிலும் 2 பேர் வீதம் 200 பக்தர்களை அமர வைத்து உணவு வழங்கப்பட்டது.

    பக்தர்கள் திருமலைக்கு செல்ல திருப்பதி, அலிபிரி ஆகிய பகுதிகளில் இருந்து அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மலைப்பாதைகளில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இ-பாஸ் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

    திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் சிலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.
    Next Story
    ×