search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் சன்னதி தெருவை படத்தில் காணலாம்.
    X
    பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் சன்னதி தெருவை படத்தில் காணலாம்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடக்குமா? என்று எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
    கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகத்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரைவிசு கனிகாணும் நிகழ்ச்சி, சித்ரா பவுர்ணமி விழா, நிறைபுத்தரிசி பூஜை, ஆவணி மாத ஓணக்கோடிபட்டு அணிவித்து வழிபாடு, மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம், ஆடி களபபூஜை, ஆடி செவ்வாய் ஆகிய விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    திருமண தடையை நீக்குவதற்காக 11 வாரம் தொடர்ந்து நடத்தப்படும் சுயம்வர அர்ச்சனை வழிபாடு இந்த கோவிலில் மிகவும் விசேஷம் ஆகும். அதேபோல இளம் கன்னி பெண்களின் தோஷம் நீங்குவதற்காக நடத்தப்படும் பரிகாரபூஜையான கன்னியாபூஜையும் இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் பகவதி அம்மனுக்கு சிலர் பட்டுபுடவை அணிவித்து நேர்த்தி கடனும் செலுத்துவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கோவிலில் நித்யகால பூஜைகளை மட்டும் வழக்கம் போல் மேல்சாந்திகள் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சி, சித்ரா பவுர்ணமி விழா ஆகிய விழாக்கள் பெரிய அளவில் நடக்காமல் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடப்பது போல் நடத்தப்பட்டது. பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவதாகவும் 9-ம் திருவிழாவான 3-ந் தேதி தேரோட்டமும், 10-ம் திருவிழாவான 4-ந் தேதி இரவு தெப்பத்திருவிழாவும் நடப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) வைகாசி விசாகத்திருவிழா கொடிஏற்றம் நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இது குறித்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் பக்தர்கள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கால் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சியும் சித்ராபவுர்ணமி விழாவும் பெரிய அளவில் நடக்காமல் வழக்கமாக நடக்கும் பூஜைகள் மட்டும் நடந்தது. பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெரும்பாலான தொழில்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கெல்லாம் சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று கோவில்களில் விழாக்கள் நடைபெற அனுமதிக்க வேண்டும். அப்போது பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமிதரிசனம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். ஊரடங்கு 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு சில விதிமுறைகளை வகுத்து கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே குமரி மாவட்ட பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.

    இவ்வாறு பக்தர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×