search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரை படத்தில் காணலாம்.
    X
    மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரை படத்தில் காணலாம்.

    வஞ்சியம்மன் கோவில் தேரோட்டம்

    மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருப்பூர் மாவட்டம், மூலனூரில் பிரசித்தி பெற்ற வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். புகழ்பெற்ற இந்த கோவில் கொங்கு, சேரலான், பூசன் குலத்தவர்களுக்கு குல தெய்வ கோவிலாகும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான 38-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    மூலனூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து வஞ்சியம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி வஞ்சியம்மனை வழிபட்டனர்.

    இதற்கிடையே வஞ்சியம்மன் கோவில் தேரோட்டத்தை பார்ப்பதற்காக மூலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்திருந்தனர். கோவில் முன்பு பக்தர்கள் திரண்டிருந்தனர். தேரில் எழுந்தருளிய வஞ்சியம்மனை தரிசித்தனர். தேர் மீது நவதானியங்களை வீசியெறிந்தனர்.

    பின்னர் இரவு 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் முதன்மையாளர்கள் ராமநாதன், ராமசாமி, கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவிலை சேர்ந்த குலத்தவர்கள், ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் உலா வந்து தேர்நிலையை வந்து அடைந்தது. மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், செல்லையா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×