search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகத்தையொட்டி கலச பூஜை மற்றும் ஹோமம் நடந்த போது எடுத்த படம்.
    X
    கும்பாபிஷேகத்தையொட்டி கலச பூஜை மற்றும் ஹோமம் நடந்த போது எடுத்த படம்.

    அல்சூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

    அல்சூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    பெங்களூரு டவுனில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஒன்று அல்சூர். இங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் மிகவும் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் தைப்பூசம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இக்கோவிலில் ரூ.23 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வந்தது.

    இந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று யாகசாலை நுழைதல், புண்யாஹனம், வாஸ்து ஹோமம், கலச ஸ்தாபனம், கலச அர்ச்சனை, கபதி, நவக்கிரகம், மிதுஞ்சய ேஹாமங்கள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது.

    மாலையில் வேத பாராயணம், வேதிக அர்ச்சனை, 2-ம் கால ஹோமம், அஷ்டபந்தன சேவை, மகாமங்கள ஆரத்தி ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வேத பாராயணம், வேதிக அர்ச்சனை, ஹோமங்கள், ஸ்பர்ஷாஹுதி, நாடி சந்தான பூர்விக கலா ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகளும், காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    அதையடுத்து 12 மணிக்கு கோ பூஜை, மகா மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி செல்வமணி, அறங்காவலர் சுசீலா உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    Next Story
    ×