
இந்த ஊர்வலம் நாளை மதியம் பம்பை சென்றடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். சன்னிதானத்தில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து 6.45 மணிக்கு தீபாராதனைக்கு பின் பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். பிரகாசமான ஜோதியை பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்வார்கள். மகர விளக்கை பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை அதிகாலை 2.09 மணிக்கு சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கும் வேளையில் மகர சங்கிரம பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும். அப்போது, திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன்மார்களால் கொண்டு வரப்படும் நெய் மூலம் சாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடை அடைக்கப்பட மாட்டாது. நாளை மகர சங்கிரம பூஜை மற்றும் அபிஷேகத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
நாளை மகர விளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, ஆபரண பெட்டிகள் எடுத்துவர வசதியாக, மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் மாலை 6 மணி முதல் 7 மணி வரை 18-ம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும். மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பின் இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.
திருவாபரண ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக புல்மேடு உட்பட ஜோதி தரிசனம் காணும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பம்பை மலை முகடில் (கில் டாப்) இருந்து பக்தர்கள் ஜோதி தரிசனம் காண வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. மகர ஜோதிக்கு பின் 16- ந் தேதி முதல் 20- ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் படிபூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடைபெறும். 21- ந் தேதி காலை 6 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.