search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஷ்டமி சப்பரங்கள் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் வந்த அழகிய காட்சி.
    X
    அஷ்டமி சப்பரங்கள் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் வந்த அழகிய காட்சி.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பரங்கள் வீதி உலா

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பரங்கள் வீதி உலா நடந்தது. இதையொட்டி அம்மன் சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத அஷ்டமி சப்பரம் வீதி உலா நேற்று நடந்தது. இதுகுறித்த புராண வரலாறு வருமாறு:-

    ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதமாக தானியங்களை இட்டுக்கொண்டிருந்தார். அதனை பார்த்த பார்வதிதேவி இதுகுறித்து கேட்டார். அப்போது சிவபெருமான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படி(உணவு) அளப்பதாக தெரிவித்தார். மறுநாள் சிவபெருமானின் இந்த செயலை பரிசோதிக்க பார்வதி தேவி முடிவு செய்தார்.

    அதன்படி ஒரு எறும்பை பிடித்து ஒரு குவளையில் அடைத்து வைத்தார். தான் அடைத்து வைத்த எறும்பிற்கு இறைவன் எப்படி படி அளக்கிறார் என்பதை காண முடிவு செய்தார். சிறிதுநேரம் கழித்து அந்த குவளையை திறந்து பார்த்த போது அந்த எறும்பு அரிசியை தின்று கொண்டிருந்தது. அதனை கண்டு வியந்த பார்வதி தேவி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சிவபெருமானிடம் மன்னிக்குமாறு வேண்டினார். அந்நாளே மார்கழி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பிரதட்சணம் ஆகும்.

    சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளிய காட்சி

    இந்த திருவிளையாடலை விளக்கும் வகையில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தனித்தனியாக ரிஷப வாகனங்களில் சப்பரங்களில் எழுந்தருளி கோவிலில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டார்கள். பின்னர் சப்பரங்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்படாகி யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண், கீழமாசி வீதி வழியாக வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்..

    இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்றைய ஒரு திருவிழாவில் மட்டுமே பெண்கள் அம்மன் சப்பரத்தை இழுத்து வருவதை காண முடியும். மேலும் சுவாமி படி அளக்கும் விதமாக தெரு முழுவதும் அரிசி தூவப்பட்டது. அதனை பிரசாதமாக நினைத்து பக்தர்கள் தெருவில் கிடந்த அரிசிகளை எடுத்து சென்றனர்.
    Next Story
    ×