
இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல, மேளதாளம் முழங்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி முகூர்த்தகாலுக்கு மரியாதை செலுத்தியது.
முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி, திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.