
நேற்று காலை 9 மணிக்கு அனைத்து சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசுவாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு ராஜகோபால சுவாமி கோவில் முன்பு சப்பரங்கள் அணிவகுத்து நின்றது. இரவு 8 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் அணிவகுத்து நின்றன. அப்போது ஆயிரத்தம்மன் தனது சூலாயுதத்தால் மகிஷாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் வைபவமும், மகிஷாசூரன் சிம்ம வாகனமாக அம்மனை வந்தடையும் வைபவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க 12 அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து பூரண கும்ப மரியாதையுடன் அம்மன்களை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு படைப்பு தீபாராதனையும், பலியிடுதலும் நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் நின்ற ஆயிரத்தம்மன், பேராச்சியம்மன், முப்புடாதி அம்மன், யாதவர் உச்சிமாகாளி அம்மன் சப்பரங்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்படுகிறது. அனைத்து அம்மன்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.
நெல்லை சந்திப்பில் உள்ள கண்ணம்மன், புது அம்மன் கோவில், சிந்துபூந்துறை விசுவநாதசெல்வி அம்மன் கோவில், மேகலிங்கபுரம் செல்வி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமமும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.