search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மும்மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபோது எடுத்தபடம்.
    X
    மும்மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபோது எடுத்தபடம்.

    உத்தமர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றான உத்தமர்கோவில் உள்ளது. இங்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் முப்பெரும்தேவியருடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 8-ந்தேதி மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மறுநாள் காலையில் 2-ம் கால யாக பூஜையும், அன்று மாலையில் 3-ம் கால யாகபூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் 4-ம் கால யாகபூஜையும், மாலையில் 5-ம் கால யாகபூஜையும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 6-ம் கால யாகபூஜை நடைபெற்றது. இதில் பிரம்மா, விஷ்ணு யாகசாலையில் காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, புண்யாகவாசனம், ததுக்த ஹோமமும், சிவன் யாகசாலையில் அதிகாலை 4 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மும்மூர்த்திகளின் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 6.50 மணிக்கு சவுந்தர்ய பார்வதி, பூர்ணவல்லித்தாயார், ஞான சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, நால்வர், வேணுகோபாலர், தசரதலிங்கம் மற்றும் கருடாழ்வார் ஆகிய பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து காலை 7.20 மணிக்கு அனைத்து மூலவர்களுக்கும் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைப்பெற்று சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி ஆன்மிக குழுவினர், இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் கொள்ளிடம் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவின்பேரில் திருச்சி மண்டல இணைஆணையர் சுதர்சன் மேற்பார்வையில், உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் செயல் அலுவலர் பெ.ஜெய்கிஷன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×