search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சவர்ணசாமி கோவில் நுழைவு வாயில் கோபுரம் இல்லாமல் மொட்டையாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    பஞ்சவர்ணசாமி கோவில் நுழைவு வாயில் கோபுரம் இல்லாமல் மொட்டையாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

    உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிமுறைப்படி நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் ஏற்பட்டு உள்ளது.
    முற்கால சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது திருச்சி உறையூர். ஊர் எனப்படுவது உறையூர், கோழி மாநகர் என்ற சிறப்பு பெயர்களும் உறையூருக்கு உண்டு. சோழர்களின் ஆட்சி காலத்தில் உறையூர் பல ஆண்டுகள் தலைநகராக இருந்ததால் அவர்களின் கட்டிடக்கலை, மன்னர்கள் குல தெய்வமாக வழிபட்ட ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பிய கோவில்கள் இன்னமும் வரலாற்று எச்சங்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.

    அத்தகைய வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில். உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் என்ற மன்னன் கட்டிய இக்கோவிலுக்கு என ஒரு தனி வரலாறு உண்டு. மன்னன் பட்டத்து யானையின் மீது அமர்ந்து வீதி உலா வந்தபோது திடீர் என யானை மதம்பிடித்து ஓடவே மன்னன் செய்வதறியாது திகைத்தான். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சேவல் யானையின் தலையில் வந்து கொத்தவே யானை மண்ணோடு சரிந்தது. மன்னனும், மக்களும் உயிர் தப்பினார்கள்.

    யானையை சாதாரண ஒரு சேவல் அடக்குவதா? இந்த அதிசயம் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றே என வியந்த மன்னன், யானையை கோழி அடக்கிய இடத்தில் எழுப்பியது தான் பஞ்சவர்ணசாமி கோவில். இதற்கு ஆதாரமாக கோவிலின் ஒரு தூணில் சேவல் யானையை அடக்குவது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதை இப்போதும் காண முடிகிறது.

    மனைவி, குழந்தைகளை இழந்ததால் மனம் அமைதியற்று கால் போன போக்கில் நடந்து சென்ற உதங்க மாமுனிவருக்கு இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் ஐந்து நிறங்களில் காட்சி அளித்து அவருக்கு மன அமைதி அளித்ததாக கோவில் திருத்தல வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு ஐவண்ணநாதர் என்ற பெயரும் உண்டு. லிங்க வடிவில் உள்ள மூலவர் ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் தான் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் உறையூர் பகுதி மக்கள் மட்டும் இன்றி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சாமிதரிசனத்திற்காக இங்கு வருகிறார்கள். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம், பிரதோஷம், திருக்கல்யாணம், சிவராத்திரி விழா, ஆருத்ரா தரிசன விழா, பஞ்சப்பிரகார விழா போன்றவை இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானவை.

    இக்கோவிலில் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் இதுவரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. பொதுவாக ஆகம விதிமுறைப்படி இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 16 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இந்த ஆண்டாவது மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்யுமா? என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது தொடர்பாக உறையூரை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில் ‘சோழ மன்னர்கள் காலத்தைய தேர் அழிந்ததற்கு பின்னர் சுமார் 60 வருடங்களாக சாமி சவுக்கு மர கட்டைகளால் செய்த தேரில் தான் பவனி வந்தார். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அறநிலைய துறை மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் புதிய தேர் செய்யப்பட்டு இந்த ஆண்டு தான் தேரோட்டமும் நடந்தது.

    தேர் செய்யும்போதே திருப்பணி வேலைகளையும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அறநிலைய துறை அதற்குரிய நிதியை ஒதுக்க வேண்டும் என பக்தர்களாகிய நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் பக்தர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்து சமய அறநிலைய துறை பஞ்சவர்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகளை தொடங்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் பக்தர்களே திருப்பணி வேலைகளை தொடங்குவதற்காவது அனுமதி அளிக்க வேண்டும்’ என்றார்.
    Next Story
    ×