search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்ததை படத்தில் காணலாம்.
    X
    பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்ததை படத்தில் காணலாம்.

    63 நாயன்மார்களுக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள்

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர்.
    அவினாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மையானது இந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் கடந்த 10-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து 11 -ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், இரவு பூத வாகனம், அன்ன வாகனம் காட்சிகள், அதிகார நந்தி கிளி வாகன காட்சிகள் நடந்தது.

    13-ந் தேதி இரவு புஷ்ப பல்லக்கு கைலாசவாகன காட்சிகள் நடைபெற்றது. நேற்று இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்வு நடந்தது. இதில் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும, பூமி நீளா தேவி கரிவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. நிகழ்ச்சியின்போது வானவேடிக்கை அதிர்வேட்டுகள் முழங்க சிவ கண பூத வாத்தியம் இசைக்கப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கடைவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி வலம் வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலைத் தோரணங்கள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) கற்பக விருட்சம் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகள் ஆகியன நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பூர நட்சத்திரத்தில் சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 18-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பத்தேர் உற்சவம், 20-ந் தேதி நடராஜர் தரிசனம் நடக்கிறது. 21-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழா மற்றும் இரவு மயில்வாகனம் காட்சியுடன் விழா நிறைவடைகிறது. நேற்று சித்திரை முதல் தேதி என்பதால் அதிகாலை 4 மணி முதல் அவினாசி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
    Next Story
    ×