search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. இந்த விழாவை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    X
    கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. இந்த விழாவை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ‘மயிலையே கயிலை, கயிலையே மயிலை’ என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில். இங்கு அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டார். இந்த கோவிலில், திருஞானசம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றினார். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலாப்பூர் கோவிலில் தான்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனி பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

    அந்தவகையில் இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. 10 நாள் திருவிழாவில் தினசரி ஒரு வாகனத்தில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கு கபாலீசுவரர் காட்சி அளிக்கும் விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று காலை திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெற்றது. கூடிநின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அறுபத்து மூவர் நாயன்மார்கள் சிலைகள் மலர் களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாடவீதிகளில் அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது.

    அப்போது, வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீசுவரர், நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். இவர்களுடன், மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர், முண்டககண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலாவின் போது கோவிலை சுற்றி பெண்கள் மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் சத்தியமூர்த்தி தலைமையில் மன்ற தலைவரும், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவருமான பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்தார்.

    இதேபோன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மயிலாப்பூர் மாட வீதிகள் அருகில் வசிப்பவர்கள் நீர்மோர், குளிர்பானங்கள், இனிப்புகள், எழுதுபொருட்கள், அன்னதானம் வழங்கினார்கள்.

    விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் செய்திருந்தனர்.
    Next Story
    ×