search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாளய அமாவாசை: மனதார தானம் செய்ய வேண்டும்
    X

    மகாளய அமாவாசை: மனதார தானம் செய்ய வேண்டும்

    மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

    இவர்கள் “காருண்ய பித்ருக்கள் என்று அழைக் கப்படுகின்றார்கள்’’. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.'

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. எனவே மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள்     - பலன்கள்

    அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
    துணி - ஆயுள் அதிகமாகும்
    தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
    தீபம் - கண்பார்வை தெளிவாகும்
    அரிசி - பாவங்களை போக்கும்
    நெய் - நோய்களை போக்கும்
    பால் - துக்கம் நீங்கும்
    தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
    பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
    தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
    வெள்ளி - மனக்கவலை நீங்கும்
    பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
    தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
    நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
    பூமி தானம்     - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று இருக்கிறது.

    அது தான் பசுவிற்கு உணவளிப்பது. கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை நீக்கலாம். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

    கர்ணனின் தான தர்மம்

    மகாபாரதத்தின் பிரபல வீரனான கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான்.

    அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் அவன் அன்னதானம் செய்தான். எனவே இந்த மாதத்தில் வழங்கப்படும் தானங்கள் எல்லா பித்ருக்களுக்கும் நலம் தருகின்றன.
    Next Story
    ×