search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
    நாக வழிபாட்டுக்கு உகந்த கோவிலாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் கருதப்படுகிறது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் திகழ்கின்றது. இங்கு நீருற்றில் இருந்து எடுக்கப்படும் மண் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண் 6 மாதங்கள் கருப்பாகவும், 6 மாதங்கள் வெள்ளையாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜரை தரிசனம் செய்ய கோவிலில் பக்தர்கள் குவிவார்கள். அதிலும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அதாவது ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாகராஜரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டும் இன்றி நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து சாமியை தரிசனம் செய்தார்கள். பெரும்பாலும் கேரள பக்தர்களே அதிகமாக காணப்பட்டனர்.

    இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. கோவில் நடை திறப்பதற்கு முன்பே அங்கு பக்தர்கள் வரிசையில் காத்து இருந்தனர். மூலஸ்தானத்தில் இருந்து கோவிலின் வெளியே உள்ள நுழைவு வாயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து சாமியை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்பட்டது.

    நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி உள்ள நாகர் சிலைகளை வழிபடுவது வழக்கம். அதே போல நேற்றும் அலைமோதிய பக்தர்கள் முதலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து,. பின்னர் மஞ்சள் தூவியும் வழிபட்டனர். மேலும் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வணங்கிய பிறகு நாகராஜரை தரிசனம் செய்யச் சென்றனர்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவிலின் மூலஸ்தானம் வரையும் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும் அறநிலையத்துறை நிர்வாகிகளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதோடு மட்டும் அல்லாது கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவிலில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருந்தன. கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவில் ரத வீதியில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 
    Next Story
    ×