search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து அபிஷேகம் செய்யும் காட்சி.
    X
    நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து அபிஷேகம் செய்யும் காட்சி.

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால்அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

    ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
    உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக இருக்கிறது. நாக வழிபாட்டுக்கு பல கோவில்கள் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. நாகராஜா கோவிலில் மூலஸ்தானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இங்கு நீருற்றில் இருந்து எடுக்கப்படும் மண் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மண் 6 மாதங்கள் கருப்பாகவும், 6 மாதங்கள் வெள்ளையாகவும் இருக்கும்.

    இதுபோன்ற பல சிறப்புகளை கொண்ட நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாகராஜா கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

    அவர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி உள்ள நாகர் சிலைகளை வழிபட்டார்கள். அப்போது நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் அபிஷேகம் செய்தனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வழிபாடு செய்தனர்.

    நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.


    அதைத் தொடர்ந்து நாகர் சிலைகளுக்கு நடுவே அமைந்துள்ள விநாயகரை வணங்கிவிட்டு நாகராஜரை தரிசிப்பதற்காக சென்றார்கள். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் நீண்ட வரிசை உருவானது. நாகராஜரை வணங்குவதற்காக வெகு நேரம் வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தர்களாக மூலஸ்தானத்துக்குள் சென்றனர். நாகராஜரை வேண்டி வணங்கியதோடு இடப்புறம் இருக்கும் சிவனையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு அங்கு புல்லாங்குழலுடன் காட்சி அளிக்கும் கிருஷ்ணரை வணங்கிவிட்டு நேராக துர்க்கை அம்மன் சன்னதிக்கு பக்தர்கள் வந்தனர். பின்னர் துர்க்கை அம்மனுக்கு குங்குமமிட்டு தரிசனம் செய்தனர்.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையை காட்டிலும் நேற்று நாகராஜா கோவிலில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த மரக்கம்புகளை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கோவிலின் மூலஸ்தானம் வரையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது.ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி வெளிப்புறத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு நாகராஜா கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. 
    Next Story
    ×