search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹோமங்களுக்கு ஏற்ற பலன்கள்
    X

    ஹோமங்களுக்கு ஏற்ற பலன்கள்

    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்.
    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவ ராசியும் தன் வினைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துதான் தீர வேண்டும். என்றாலும், ஹோமங்கள் செய்வதன் மூலமும், பிற இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதன் மூலமும் விசேஷ நற்பலன்களைப் பெற முடியும்.

    வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டு மானால், அதற்குரிய ஹோமத்தை செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து - என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும்.

    என்ன ஒன்று... நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு ஹோமங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான ஹோமங்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், வாஸ்து ஹோமம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும் ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகின்றன.

    தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

    எல்லா ஹோமங்களையும் நாம் வசித்து வரும் வீடுகளில் செய்ய முடியாது. வீட்டில்தான் ஹோமங்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை (வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் தங்களால் வீட்டில் ஹோமம் செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். அத்தகையவர்கள் தங்களால் முடிந்த வழிபாட்டை மனபூர்வமாக இறைவனுக்கு செய்தாலே போதும்).

    தேச நன்மை கருதியும், நாம் வசிக்கும் ஊரின் நலன் கருதியும் ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பிரமாண்ட அளவில் ஹோமங்கள் நடக்கும்போது நம் சக்திக்கு முடிந்த வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அங்கே அர்ப்பணிக்க வேண்டும்.

    எதுவுமே வாங்கித் தர முடியாதவர்கள், தங்களால் முடிந்த உடல் உழைப்பைக் கொடுக்க லாம். அதற்கு ஈடு இணை இல்லை. ஆலயம் மற்றும் பொது இடங்களில் ஹோமங்கள் நடத்தப்படும்போது அதன் பலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹோமத்தின் சங்கல்பதாரர் என்று ஒருவர் இருந்தாலும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே அதற்குண்டான பலன் கிடைக்கிறது. 
    Next Story
    ×