search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள்

    விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடி மரம், 5 தேர், 5 தீர்த்தம், 5 தலவிருட்சம் என அனைத்தும் 5 எண்ணிக்கையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். ஒவ்வொரு கோவிலையும் வணங்கினால் ஒவ்வொரு வரம் கிடைக்கும்.

    ஆனால் விருத்தகிரீஸ்வரரை வணங்கினால்தான் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து விருத்த கிரீஸ்வரரை தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுஞ்ஞை கோபுரங்கள், விமானங்கள் கலகர்ஷணம், செய்து உடன் கலசங்கள் புறப்பாடு நடந்து முதல்கால யாகசாலை பூஜை, இரவு 8.15 மணிக்கு முதல் கால பூர்ணஷூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5.45 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜைகளும், மஹா பூர்ணாஷூதியும் நடந்தது. காலை 6.30 மணிக்கு பால ஸ்தாபன படத்திற்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மயிலாடுதுறை துணை ஆணையர் ஜீவரத்தினம், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., செயல் அலுவலர் ராஜாசரவணக்குமார், ஆய்வாளர் லட்சுமிநாராயணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கியது.

    கோவில் திருப்பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29.4.2002 அன்று நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டதால் மீண்டும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலில் உள்ள கோபுரங்கள், சன்னதிகள், மண்டபங்கள், பிரகாரங்கள் என 39 வகையான திருப்பணிகளை செய்ய ரூ.4 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் தேவைப்படுகிறது.

    இதில் தமிழக அரசு ரூ.89 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளது. ரூ.1 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் பணிகளை செய்ய உபயதாரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் மற்ற பணிகளை செய்ய பணம் தேவைப்படுகிறது. இந்த பணத்தையும் உபயதாரர்கள் ஏற்றுக்கொண்டால் முழுவீச்சில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்படும். பின்னர் விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். 
    Next Story
    ×