
நாளை முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.
அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு, படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்கவேண்டும்.
முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.