search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சர்கார் கதை சர்ச்சை - பாக்யராஜ் மீண்டும் ராஜினாமா கடிதம்
    X

    சர்கார் கதை சர்ச்சை - பாக்யராஜ் மீண்டும் ராஜினாமா கடிதம்

    ‘சர்கார்’ படத்தின் கதை சர்ச்சை தொடர்பாக, எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். #Sarkar
    நடிகர் விஜய், நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் செய்தார்.

    ‘செங்கோல்’ என்ற தனது படத்துக்காகத் பதிவு செய்திருந்த கதையைத் தான் சர்காராக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தார்.

    மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் செய்திருந்தார். இந்தப் புகாரை ஆய்வுசெய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், ‘சர்கார்’, ‘செங்கோல்’ கதைகளை ஆய்வுசெய்து, இரு கதைகளின் மையக்கருவும் ஒன்றுதான் எனக்கூறினார்.

    மேலும் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கோர்ட்டில் கருத்தும் தெரிவித்தார். இதற்கிடையில், கோர்ட்டு விசாரணையில் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சர்கார் பட கதை சர்ச்சை காரணமாக தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே.பாக்யராஜ் அறிவித்தார்.

    தனக்கு தேவையில்லாத அசவுகரியங்கள் ஏற்பட்டதால் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை நிர்வாகிகள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினர் கூறும்போது, “ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம் ” என பாக்யராஜிடம் கூறினர்.

    இந்நிலையில் மீண்டும் தான் ராஜினாமா செய்வதாக கூறி, மற்றொரு கடிதத்தை பாக்யராஜ் சங்கத்துக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பாக்யராஜின் மற்றொரு ராஜினாமா கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×