என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நல்ல கதை, நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் என அர்த்தனா கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...
    சமுத்திரகனியின் ‘தொண்டன்’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர் அர்த்தனா. இது பற்றி கூறிய அவர்...

    “முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகி விட்டீர்களே... என்று எல்லோரும் வருத்தத்துடன் கேட்கிறார்கள். தங்கையாக நடிப்பது அவ்வளவு பெரிய தவறா? சமுத்திரகனி சார் இயக்கம், அவருடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் கதையே கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

    ‘தொண்டன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி சாருக்கு போன் செய்து ‘என் கதாபாத்திரம் பற்றி ஒருவரியில் சொல்லுங்கள் நான் தயாராகி வருகிறேன்’ என்றேன். அதற்கு அவர், ‘ என்தங்கை நல்ல மங்கை’ என்று மட்டும் தெரிவித்தார். துணிந்து நடித்தேன். உண்மையான வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை பாத்திரத்தின் மூலம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அடுத்து 2 படங்களில் கதாநாயகியாக நடிக்கிறேன். என்றாலும் நல்ல கதை, நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்” என்றார்.
    என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...
    ‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து நடித்த படங்கள் அமலாபாலுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.

    ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.


    அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுப் பயலே-2’ மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து சமீபத்தில் கூறிய அமலாபால், ‘எதிர்பாராத விதமாக எல்லாம் நடந்து விட்டது. நான் விஜய்யை இப்போதும் விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

    இப்போது அமலாபால் அளித்துள்ள பேட்டியில்... “திருமணம் என்பது முழுவதுமாக வெறுத்து ஒதுக்கும் வி‌ஷயம் அல்ல. என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும். என்றாலும் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. இப்போது என் கவனம் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
    பாகிஸ்தானில் உள்ள பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பிறந்து வாழ்ந்த பூர்வீக வீடு போதிய பராமரிப்பு இல்லாததால் இடிந்து வீழ்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
    பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் (95). இவர் கடந்த 1922-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் மொகல்லா ஹுடாதத் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ருயிஷா ஹவானி பஜாரில் பிறந்தார்.

    அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. தனது ‘டீன் ஏஜ்’ பருவத்தில் அங்கிருந்து புறப்பட்டு மும்பை வந்த அவர் நடிகர் ஆனார்.

    தற்போது அவரது பூர்வீக வீடு கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் மூலம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது அது கைபர்பக் துன்கவா மாகாண அரசின் பராமரிப்பில் உள்ளது. ஆனால் அந்த வீடு சரிவர பராமரிக்கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. எனவே அது சிதிலமடைந்து வந்தது.


    தற்போது அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தற்போது அந்த வீட்டின் முன் பகுதியும், கேட் மட்டுமே உள்ளன. வீட்டை பராமரித்து பாதுகாக்கும்படி கைபர் பக்துன்கவா அரசுக்கு 6 தடவை மனு அனுப்பியும் அது கண்டு கொள்ளவில்லை என பாரம்பரிய கலாசார கவுன்சில் பொதுச்செயலாளர் சகீல் வகீதுல்லா தெரிவித்தார்.

    திலீப்குமார் பிறந்து வாழ்ந்த பூர்வீக வீடு சிதிலமடைந்து வருவதை அவர் மனைவி சயீரா பானு கைபர் பக்துன்கவா அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்ததாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே இடிந்து கிடக்கும் வீடு புதிதாக கட்டப்படும் என தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குனர் அப்துல்சமது தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
    பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
    சென்னை தியாகராய நகரில் உள்ள வித்யோதயா காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தியாகராய நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வழியின்றி சுற்றிச்செல்ல வேண்டியதுள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் உத்தரவின்படி வக்கீல் ஆணையர் இளங்கோ, தன்னுடைய ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 33 அடி பாதை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரது முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், பசுபதி, ஸ்ரீமன், சங்கீதா உள்பட பலர் வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.



    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘33 அடி பொது பாதையை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை நடிகர் சங்கத்துக்கு தாரைவார்த்து விட்டனர். கிணற்றை காணவில்லை என்று சினிமா படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப்போல, பொது பாதையை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    நடிகர் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள நில வரைபடத்தை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது.

    இதையடுத்து, இந்த திரைப்படத்தை தடைசெய்யும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் செய்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் ‘96’ படத்தின் முன்னோட்டம்.
    ‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திசண்டை’ படங் களை தயாரித்த மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் காளிவெங்கட், வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது.

    ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், எடிட்டிங் - கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா, தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



    இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது.

    அத்துடன் கல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஜனரஞ்சகமான படமாக ‘96’ உருவாகிறது.
    மோகன்லால், கமாலினி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘புலிமுருகன்’ படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படத்தின் விமர்சனம்.
    வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.

    அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.



    கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.

    ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

    இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.

    கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.



    அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.

    ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.
    அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தன்னுடைய பிறந்தநாளில் அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. தமிழகத்தை வழிநடத்த சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் தேவை என்ற மனநிலை மக்கள் மனதில் எதிரொலித்தபடி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசியல் கள வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் ரஜினி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கொடுத்த வாய்ஸ் எடுபட்டது.

    ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை. பாபாஜி வாழும் இமயமலைப் பகுதிக்கு செல்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். அவரிடம் ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து வந்ததால் அவர் இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற புதிய எதிர்பார்ப்பு மீண்டும் உருவானது.



    ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள்” என்று கூறினார். அவர் போர் என்று கூறியதை தேர்தலாக அரசியல் நிபுணர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் கருதுகிறார்கள். எனவே ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார் என்று பேசப்படுகிறது.

    ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகளும் ரஜினிக்கு சாதகமாக உள்ளன. ஆனால் ரஜினியிடம் இருந்து இதுவரை அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ரசிகர்களுடன் முதல்கட்ட சந்திப்பை முடித்த ரஜினி தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்பிறகே அவர் அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான டிசம்பர் மாதம் 12-ந்தேதி அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்று தெரியவந்துள்ளது. ரஜினிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இதை உறுதிபடுத்தி உள்ளார். ரஜினி அரசியலுக்கு வரும் முடிவில் உள்ளார். தொண்டர்களுடன் கலந்து பேசி விட்டு அவர் பிரமாண்ட கூட்டத்தை கூட்டி தனது முடிவை வெளியிட வியூகம் வகுத்துள்ளார்.

    பிறந்த நாள் அன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் தன் ரசிகர்களிடம் இரட்டிப்பு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்த முடியும் என்று ரஜினி நினைக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாகும். அடுத்த சில மாதங்களில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
    மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டது ஏன்? என்று மம்முட்டி பதில் அளித்துள்ளார்.
    மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றிகளை வாரிக் குவித்துள்ளன.

    இவர் நடிப்பில் கால் பதிக்கும் முன்னரே, திருமண வாழ்க்கையில் காலெடுத்து வைத்துவிட்டார். இந்நிலையில், நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு ஏன் திருமணம் செய்துவைத்தோம் என்பது குறித்து மம்முட்டி பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவது திருமணம்தான். திருமணம் செய்துகொண்டால் பொறுப்பு வரும். வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும். திருமணம் செய்து கொண்டால்தான் நான் அறிந்து கொண்டதை பிள்ளைகளுக்கு சொல்கிறேன்.



    என் வழியை என் மகன் பின்பற்றுகிறான். எனவேதான் நடிக்க வரும் முன்பே அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம். திருமணம் பற்றி நானும் என் மனைவியும் துல்கருடன் பேசினோம். சம்மதம் தெரிவித்ததால் மருமகள் அமல்சுபியாவை திருமணம் செய்து வைத்தோம்” என்றார்.

    சமீபத்தில் மம்முட்டி தாத்தா ஆனார். துல்கர் சல்மான்-அமல் சுபியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருந்தது. வசூலிலும் ரூ.1000 கோடியை தாண்டி இந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே, இரண்டாவது இடத்தில் இருந்த ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியானது. அங்கு அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் வசூலும் குவியத் தொடங்கியது.

    இதையடுத்து, அதிக வசூலில் முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ அடுத்த சில வாரங்களிலேயே இரண்டாவது இடத்துக்கு வந்தது. இந்நிலையில், ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிட்டால் ‘தங்கல்’ சாதனையை முறியடித்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 17-ந் தேதி ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிடவுள்ளனர்.



    அதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 4000 திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போவதாக கூறப்படுகிறது. ‘தங்கல்’ படம் சீனாவில் 9000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘பாகுபலி-2’ படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இப்படத்துக்கு மரகதமணி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்து இன்றோடு 50 நாட்கள் ஆகியுள்ளது. 50 நாட்களுக்குள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்துள்ளது. 
    சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

    இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். காமெடி வேடத்தில் வழக்கம்போல் சூரியே நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.



    இதில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சிம்ரன், இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், ஆர்.டி.ராஜா, கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 12-வது திரைப்படமாகும். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
    பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
    பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நித்திலன் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதியும், டீசரை ஆர்யாவும் வெளியிட்டார்கள். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியிட்டில் இப்படத்தின் பாடல்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டிருந்தார்.



    இதனைத் தொடர்ந்து நேற்று இயக்குனர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டர், அனிமேஷன் போஸ்டர், டீசர், பாடல்களை போலவே இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. 
    ×