என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் பேண்டசி திரைப்படமாக வெளிவந்துள்ள ‘மரகத நாணயம்’ படத்தின் விமர்சனம்
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.

    மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.



    இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

    இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.



    ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.

    இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.



    ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.

    ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.

    நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.



    படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.



    ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.



    இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.



    பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

    மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
    வெற்றி, சவுந்தர்ராஜா, அதிதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கரதம்’ படத்தின் விமர்சனம்
    நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜாவும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வண்டி ஓட்டி வருகிறார்கள். வெற்றி தன்னுடைய பெரியப்பாவான நரேனின் வண்டியில் டிரைவராக பணியாற்றுகிறார். சவுந்தர்ராஜா தன்னுடைய சொந்த வண்டியை ஓட்டி வருகிறார். மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி கொண்டு போகிறார்கள் என்பதில் இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வலம் வருகிறார்கள்.

    இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.


    அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.

    இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.



    அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.



    கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

    பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.



    இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.

    டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.
    ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்கள் திரைக்கு வருவது எப்போது என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படங்களின் இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
    ரஜினிகாந்த், ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்திலும், கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே பல வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் உள்ளன. இவை எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.

    ‘2.0’ எந்திர மனிதன் சம்பந்தமான கதை என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல் ‘2.0’ படத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராபிக்சை புகுத்துவதில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார்.



    இதற்கான பணிகள் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கான ‘டப்பிங்’ பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. ரஜினிகாந்த் 3 நாட்களில் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார்.

    அடுத்த கட்டமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசைகோர்ப்பு பணிகளை தொடங்கி உள்ளார். ‘2.0’ அறிவியல் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் இசையால் மிரட்சியாக்கும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் இந்த படத்தின் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த விழாவில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இந்தி நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    விஸ்வரூபம்-2 படத்தில் கமல்ஹாசன் உளவு துறை அதிகாரியாக வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான டப்பிங், இசைகோர்ப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பாடல்களையும் விரைவில் சென்னையில் விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் வருகிற 23-ந் தேதி வெளியாகிறது என்றும், படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம்-2 டிரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது உரிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
    ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க காலஅவகாசம் வழங்கி, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக 1995, 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்தேன். ‘கரிகாலன்’ என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது.



    என்னால் உருவாக்கப்பட்ட ‘கரிகாலன்’ தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

    எனவே, என்னுடைய ‘கரிகாலன்’ என்ற தலைப்பு, அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

    கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, மனுவுக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    அன்பழகன் இயக்கத்தில் `கயல்' சந்திரன் - ஆனந்தி மீண்டும் ஜோடி சேரும் ‘ரூபாய்’ படத்தின் முன்னோட்டம்.
    காட் பிக்சர்ஸ் பிரபு சாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே. எண்டர்டைன்மன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’.

    இதில் சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமான இவர்கள் மீண்டும் இதில் ஜோடி சேர்கிறார்கள். இவர்களுடன் கிஷோர் ரவிசந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வி.இளையராஜா, இசை - டி.இமான், பாடல்கள் - யுக பாரதி, எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - ஏ.பழனிவேல், நடனம் - நோபல், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், இணை தயாரிப்பு - ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு - பிரபுசாலமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.அன்பழகன். படம் பற்றி இயக்குனர் அன்பழகனிடம் கேட்ட போது...



    “கயல் சந்திரன், கிஷோர் ரவிசந்திரன் இருவரும் நண்பர்கள், இவர்கள் சொத்து ஒரு லாரி தான். தவணை பணம் கட்டாவிட்டால் லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை வருகின்றனர்.

    அங்கு சின்னிஜெயந்த், ஆனந்தி ஆகியோரை சந்திக்கிறார்கள். அப்போது எதிர்பாராத பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள். இறுதியில் அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பது மீதிகதை. தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கும் ஜனரஞ்சகமான படமாக ‘ரூபாய்’ இருக்கும்” என்றார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

    கலையுலக அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "பாடல்களில் புதுமை என்பது எனக்குப் பிடித்த விஷயம். கிடைக்கிற வாய்ப்புக்களில், அதற்காக முயற்சிக்கவும் செய்வேன். ஆனால் அம்மாதிரி முயற்சிகளுக்கு வார்த்தைகள் மூலம் முதலிலேயே முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்தே நடந்தது.

    ஆரம்பத்தில் ஜி.கே.வி.யிடம் கன்னடப்படங்களுக்கு பணியாற்றியபோதும், இம்மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. அழகான இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் அமையும்போது, வினியோகஸ்தர்கள் யாராவது தற்செயலாக வந்து கேட்க நேர்ந்தால், அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட் மிகவும் மட்டமாக இருக்கும்.

    கன்னடத்தில், "உச்சா ஹாடு நமகு யாத்தக்கே?'' (இது மூத்திரப்பாட்டு - நமக்கெதற்கு) என்பார்கள்.

    அதாவது, தியேட்டரில் படம் பார்ப்பவர்களை, பாத்ரூமுக்குப் போகவைக்கும் பாட்டாம்.

    ஒரு சமயம் பஞ்சு சாரையும், என்னையும் பார்த்த ஒருவர், "இந்த `மச்சானைப் பார்த்தீங்களா?' மாதிரி ஒரு டாப் கிளாஸ் பாடல் ஒண்ணு போடலாமே'' என்றார்.

    "அந்தப் பாடலை யாரும் கேட்காமல் நாமே தானே போட்டோம்'' என்று நானும் பஞ்சு சாரும் பேசிக்கொண்டோம். அதை இவர் போன்றோருக்கு எப்படிப் புரியவைப்பது?

    அதுமாதிரி "கவிக்குயில்'' படம் ரிலீசானபோது இந்த கசப்பை நான் அனுபவிக்க நேர்ந்தது. படத்தில் `காதல் ஓவியம் கண்டேன்' என்ற அந்தப் பாடலை தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்லி வெட்டி வைத்து விட்டுத்தான் ஓட்டினார்கள்.

    `இவர்கள் இப்படித்தான் மட்டம் தட்டுவார்கள்' என தெரிந்து வைத்திருந்ததால் பொருட்படுத்தாமல் இருப்போம். அதோடு நிறைய வேலை இருந்ததால், இதையெல்லாம் கேட்டு வருத்தப்படவும் நேரமில்லை. நாங்கள் பாட்டுக்கு காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகு போல, சினிமா வெள்ளத்தில் விழுந்து வெற்றி அலைகளுக்கு எழும்புவதும், தோல்விப் பள்ளங்களில் வீழ்வதும் இல்லாது, மணற்பாங்கான பகுதியில் அமைதியாக ஓடும் ஆறு போல ஒரே சீராக போய்க்கொண்டிருந்தோம்.

    ஆரம்ப காலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

    எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

    இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

    இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

    பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

    இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

    ஆனால் இன்று வரை நான் யாருக்கும் பரீட்சை வைக்கவில்லை. எனக்கு நானே ஒவ்வொரு படத்திலும் பரீட்சை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திலும் கற்றது எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்கிறேன்.''

    அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அங்கே அவருடன் தூயவன், மகேந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

    கலைஞானம் நல்ல கதை ஞானம் உள்ளவர். அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் டைரக்ட் செய்யப் போவதாகவும், படத்தில் ரஜினி - ஸ்ரீபிரியா ஜோடியாக நடிப்பதாகவும் கூறினார். இந்தப் படத்துக்கு இசையமைத்துத்தர என்னைக் கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் செட்டில் ரஜினியை பார்த்துப் பேசினேன். அன்றைய தினம், கால் நொண்டியானதும் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    டைரக்டர் கே.பாலசந்தர் சாரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும், ரஜினியும் நடித்துக் கொண்டிருந்தவர்கள், தனித்தனியாக நடிக்க முடிவெடுத்த நேரத்தில் ரஜினிக்கு இந்தப் படம் வந்திருந்தது.

    இது தனி ஹீரோ படம். அடுத்து "புவனா ஒரு கேள்விக்குறி'' என்ற படத்தில் சிவகுமாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

    ரஜினியை ஷூட்டிங்கில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. எனக்குள்ளும் தான் அப்படியொரு `நெருப்பு' ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இருவருடைய பேச்சும், சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே வெறியோடு இருந்தது.

    "பைரவி'' பட செட்டில் கலைஞானமும் பாஸ்கரும் என்னிடம், "தேவையான பாடலை உடனடியாக ரெக்கார்டு செய்ய வேண்டும்'' எனச்சொன்னார்கள்.

    கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங்கிற்கு போனோம்.

    டைரக்டர் பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, "நண்டூருது நரிïருது'' என்று கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப் பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே டிïனை `நண்டூருது நரிïருது' என்ற சந்தத்தை வைத்தே தொடங்கியிருந்தேன்.

    கண்ணதாசனும் `நண்டூருது' என்றே தொடங்கி, தங்கையை இழந்து நிற்கும் அண்ணன், தங்கையை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் சரணத்தில், உச்சஸ்தாயியில் "ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?'' என்று எழுதியவுடன், பாடலின் வல்லமை எங்கேயோ உயரத்துக்குப்

    போய்விட்டது.இந்தப் பாடலுக்கான காட்சி படமாக்கப்படும்போது, நான் இருந்தேன். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய அந்த அருமையான ஆண்மைக் குரலின் வார்த்தைகளுக்கு, ரஜினி காலிழந்து கட்டைகளோடு நிற்க, ஒரு டிராலி ஷாட் போட்டு ரஜினியிடம் காமிரா போய் நிற்பதாக எடுத்தார், டைரக்டர் பாஸ்கர்.

    எடுக்கும்போதே அந்த `ஸ்பிரிட்' தெரிந்தது. அது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

    இந்தப் படத்திலேயே `கட்டப்புள்ள குட்டப்புள்ள' என்ற கிராமியப் பாடலையும் டைரக்டரும், கலைஞானமும் போடச் சொன்னார்கள். கவிதா ஓட்டலில் கம்போஸ் நடந்தபோது, கலைஞானம் என்னைக் கேட்காமல் வினியோகஸ்தர்கள் சிலரை வரவழைத்து விட்டார். அதில் குடந்தையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.

    அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே கவிக்குயில் பாடல் பதிவின்போது ஏற்பட்ட சம்பவம் நினைவுக்கு வர, இவர்கள் நம் பாடல் இப்படித்தான் வரவேண்டும் என்று தீர்மானம் செய்தால், நாம் புதிதாய் எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து போயிற்று. எனவே யாராவது "பாடலை பாடிக்காட்டுங்கள்'' என்று கேட்டால், பாடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

    பாடல்களை கவியரசரும் எழுதிவிட்டார். எல்லாவற்றையும் முழுமையாக பாடிவிட்டேன்.

    இந்த நேரத்தில் கலைஞானம், வினியோகஸ்தர்களை அழைத்து வந்தார். கவியரசருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு என்னைப் பார்த்து "பாடலைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுங்கள்'' என்றார்.

    ஆனால், நானோ எல்லாரும் ஆவலுடன் பாட்டை எதிர்பார்த்தும் ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து விட்டேன்.

    எழுந்தவன் கலைஞானம் அவர்களிடம் கூலாக, "இங்கே பாடினா ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ் - சுசிலாவை பாட வைத்து மிïசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக் காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    கண்ணதாசன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையில் இருந்தே புரிந்து போயிற்று.

    ரிக்கார்டிங் சமயத்தில் எனக்கும் கலைஞானத்துக்கும் ஒரு தகராறு.

    "மூன்று நாளைக்குள் ரிக்கார்டிங்கை முடிக்கத்தான் பணம் இருக்கிறது. அதனால் எப்படியாவது மூன்று நாளைக்குள் முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதுவரை இதுபோன்றதொரு பிரச்சினையை சந்தித்து இராததால், கலைஞானம் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம்
    வந்துவிட்டது.
    கார்த்திக்-அஞ்சலி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பீச்சாங்கை’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் கார்த்திக் பிரபலமான பிக்பாக்கெட் திருடன். இவனுக்கு இவனுடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.

    ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.



    இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.

    அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.



    இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.



    நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

    இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.

    பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.

    மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.
    அஜித் நடிப்பில் வெளிவந்த ’வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படங்களை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.



    அந்த படத்துக்கான இயக்குனரை தயாரிப்பு நிறுவனம் தேர்வுசெய்யும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவாவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித் தரும்படி ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதன்படி பார்க்கையில், சிவகார்த்திகேயன்-சிவா இணைப்பில் புதிய படம் ஒன்றை தொடங்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
    அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் அவருடைய சாதனை வலியுறுத்தி பாடல் ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
    அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.



    இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 
    ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குபின் நமீதா நடிக்கும் ‘மியா’ படத்தின் முன்னோட்டம்.
    இ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரிக்கும் படம் ‘மியா’. இதை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர்.

    தென்இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் இதில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ரெஜி மோன்,ஒளிப்பதிவு - ரவி சுவாமி, கலை - பிரபா மன்னார்காடு, பாடல்கள் - முருகமந்திரம், படத்தொகுப்பு- வினீத், தயாரிப்பு - மின்ஹாஜ், எழுத்து - இயக்கம் ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா.



    இந்த படத்தை பற்றி இயக்குனர்களிடம் கேட்டபோது, “‘மியா’ மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது தான் ‘மியா’ படத்தின் கதை. கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம்” என்றார்.

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. மியா படம் இந்த மாதம் வெளியாகிறது.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா. மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூகாம்பிகை மீது நான் பாடிய கன்னடப் பாடல்களை, சினிமாவில் எனக்கு இசையமைப்பாளர் அங்கீகாரம் கொடுத்த பஞ்சு அருணாசலம் சாரிடமும் போட்டுக்காட்ட விரும்பினேன்.

    அப்போதே இரவு 10-30 மணி ஆகியிருந்தது. இருந்தாலும் போனேன். பாடல்களைக் கேட்டவர் பிரமை பிடித்தவர் போலானார். "பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல் தடவை. இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள் என்றார்.

    அங்கேயே அண்ணி (பஞ்சு அருணாசலத்தின் மனைவி) இருவருக்குமாக டிபன் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினார்கள். சாப்பிடத் துவங்கும்முன் அவரிடம், "அண்ணி! இந்தப் பாடல்களை கேட்டீர்களா?'' என்று கேட்டேன்.

    "அய்யோ! கேட்கும்போதே உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது'' என்றார்.

    நான் அவர்களிடம், "அண்ணி! அது யாருன்னு நினைச்சீங்க? அது என் அம்மா'' என்றேன். அதோடு நில்லாமல், "நான் கூப்பிட்டால் இப்ப இங்கே வருவாங்க'' என்று விரலை சொடுக்கினேன்.

    நான் விரலை சொடுக்கிய அந்த வினாடியில் அண்ணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. சத்தமாக "ஏய் நான்தாம்ப்பா அது'' என்று குரல் கொடுத்தார்கள்.

    அவர்கள் சத்தமாக `ஏய்' என்ற நொடியில் என் கைகள் தானாக கூப்பியது. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. உள்ளம் கரைந்து கசிந்தது. சிறிது நேரம் அப்படியே இருந்து மனம் சாந்தமானதும் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

    இந்தப் பாடல்களை வருடத்தின் முதல் நாள் அம்மாவின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இதற்காக டிசம்பர் 31-ந்தேதி மூகாம்பிகை போய்விட்டேன். இரவு தங்கி காலை 4 மணிக்கு சவுபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு டேப் ரிக்கார்டருடன் போனேன்.

    அங்கே தரிசனத்துக்கு நிற்கும் பகுதியையொட்டிய திண்ணையில் ஒரு பக்கத்தில் டேப் ரிக்கார்டரை வைத்து அந்த பாடலில் இரண்டு பாடல்களை போட்டேன். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் மனம் ரம்மியமானது. உள்ளம் அன்னையிடம் ஏங்கியது. "அம்மா! இந்தப் பாடலை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்குப் புரியுமாறு நீ தெரிவிக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டேன்.

    இந்நிலையில் இரண்டாவது பாடல் முடிந்து `டேப்'பை `ஆப்' செய்தேன்.

    ஆனால் நான் பாடிய ஸ்ருதி மட்டும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இது எங்கிருந்து கேட்கிறது என்று யோசித்தேன். அப்போதுதான் கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோவில் மணியை அடிக்கிறார்கள்; அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது.

    அடடா! அம்மா அல்லவா என் வேண்டுகோளுக்கு பதில் சொல்லி இருக்கிறாள். "பார்த்தாயா நீ பாடிய ஸ்ருதி என் கோவிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மிகூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை!'' என்று எனக்கு உணர்த்துவதைப் போலிருந்தது.

    மெதுவாக கேட்ட அந்த கோவில் மணி ஓசையின் ஸ்ருதியை என் பாடலுடன் இணைத்துப் பார்த்தேன். ஆச்சரியம். எள்ளளவும் பிசகாத அதே

    ஸ்ருதி.அம்மாவின் கருணையை எண்ணி ஆனந்தமானேன்.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம். அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம்.

    நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது. அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.

    இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.

    அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

    வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!

    அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில்.

    "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார்.

    "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன்.

    "ம்... அதை பிடித்துவிடு'' என்றார்.

    அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம். இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன!

    உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

    நாங்கள் அங்கிருந்த நேரத்தில் சாயி லாட்ஜ் முதலாளி, மாஸ்டரை பார்க்க வந்திருந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் இவரை அவசியம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். இது சாதாரணமாக வரும் தேக அசவுகர்யம் இல்லை. அதிகமாக குடித்ததால் சேரியில் எங்கேயோ விழுந்து கிடந்திருக்கிறார். சேரி ஆட்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். காலில் அடிபட்டிருக்கிறது. கைகளைப் பாருங்கள், சிராய்ப்பு எப்படி இருக்கிறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் "ஈரல்'' ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார். தொடர்ந்து அவரே, "உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்'' என்றும் யோசனை சொன்னார்.

    நாங்களும் தாமதிக்கவில்லை. ஒரு டாக்சியை வரவழைத்தோம். ரூமில் இருந்து அவரை தூக்கி குறுகலான படிகள் வழியாக இறக்கி, டாக்சியில் ஏற்றுவதற்குள்ளாகவே சிரமப்பட்டுப் போனோம்.

    மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நானும் கல்யாணும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் உடனிருந்து மாஸ்டரை

    கவனித்துக்கொண்டோம்.மறுபடியும் அவரை சாயி லாட்ஜ் 13-ம் நம்பர் அறையில் கொண்டு போய் சேர்த்தோம்.

    உடல் நலிவு சரியாகிவிட்டது. ஆனால் சோர்வாக இருந்தார். ஆனால் இன்னும் அன்டாண்டே, அடாஜியோ போன்ற இத்தாலிய இசைக் குறிப்பு வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.

    அன்டாண்டே என்றால் `மெதுவாக' என்று சொல்லிவிட்டேன். அடாஜியோ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமல்லவா, அதற்கு `இன்னும் மெதுவாக' என்று அர்த்தம்.

    கொஞ்சம் அவர் பழைய நிலைக்கு திரும்பும்வரை சாயி லாட்ஜில் இருந்து விட்டு, டாக்டர் கொடுத்த மருந்துகளை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி சொல்லிவிட்டு விடை பெற்றோம். சாயி லாட்ஜ் மானேஜரிடமும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    குரு பக்தி ஒருபுறம் இப்படி என்றால், `அம்மா' மூகாம்பிகை மீதான பக்தி இன்னொரு புறம் ஆழமாக போய்க்கொண்டிருந்தது. அம்மா மீதான பக்தி மேலீடு அதிகரித்த பிறகு தனது இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டார், இளையராஜா.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "அம்மா மீதான என் ஈடுபாடு அதிகரித்த பிறகு திரை வாழ்விலான என் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் யாரிடமும் உற்சாகமாக உரையாடுவது, நகைச்சுவை விஷயங்களை சிலாகித்து மகிழ்வது என்றிருந்த என் போக்கு அடியோடு மாறிற்று. நடை, உடை, பாவனைகளில் கூட மாறுதல் தெரிந்தது.

    கதை சொல்ல டைரக்டர் என்று யார் வந்தாலும், கதையுடன் `பாடல் சிச்சுவேஷன்' கேட்பதோடு சரி. பேச்சுவார்த்தை முடிந்து

    போகும்.அம்மா பக்தியில் என் ஆன்ம பலம் கூடியிருந்த போதிலும், திரை வாழ்க்கையில் என் வேலையிலும் கவனமாகவே இருந்தேன். கவிக்குயிலை தொடர்ந்து, அவர் எனக்கே சொந்தம், உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என படங்கள் தொடர்ந்தன. ஒவ்வொன்றிலும் புதிதாக செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பேன்.

    கவிக்குயில் படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல் இருந்தாலும், "காதல் ஓவியம் கண்டேன்'' என்றொரு பாடலை படத்தின் பிற்பகுதியில் சேர்க்க பஞ்சு சார் விரும்பினார். இந்தப் பாடலை சுஜாதா என்ற 10 வயது சிறுமியைக்கொண்டு பாட வைத்தோம். குழந்தைதானே தவிர, குரல் என்னவோ பி.சுசிலா, எஸ்.ஜானகி போல பெரியவர்களின் தரத்தை ஒத்திருந்தது.

    இந்தப் பாடலில்தான் முதன் முதலாக இசை மேதை `பாக்'கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான `வீணை'யை வாசிக்க வைத்து பாடலை பதிவு செய்திருந்தேன். சினிமா இசையில் இரு வேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது அதுவே முதல் முறை. அது நன்றாகவும் அமைந்ததில் வெற்றி கிடைத்தது.

    ஆனால், இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே வினியோகஸ்தர்கள் சிலர் கேட்டுவிட்டு, "படத்தில் இந்தப்பாடல் வரும்போது, ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போய் விடுவார்கள்'' என்று கமெண்ட் அடித்தார்கள்.

    அதோடு நின்று விடாமல் "அவர்கள் புகை பிடிப்பதற்காக நாம் ஏன் பாடல் போடவேண்டும்?'' என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு சாரிடமும் கேட்டுவிட்டார்கள்.

    இது விஷயம் என் காதுக்கு வந்தபோது நொந்து போனேன். புதிய விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நான் உற்சாகமாக பணிபுரிந்த நேரத்தில், மட்டமான அவர்கள் பேச்சு என் இதயத்தில் குத்துவது போல் இருந்தது.

    உச்ச நடிகரின் இயக்குனர்களுக்கு தற்போது திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    உச்சக்கட்ட நடிகர், பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் உச்சகட்ட நடிகரின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், உச்சகட்ட நடிகரும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்கி, அந்த படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

    இரண்டெழுத்து பெயர் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்பொழுதுவரை அப்படத்தை பற்றிய பேச்சுக்கள்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. உச்சகட்ட நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்தை பற்றிய பேச்சுக்களை அடிபட்டு வருவதால் பிரம்மாண்ட இயக்குனருக்கு தன்னுடைய படத்தைப் பற்றிய கவலை தற்போது அவரது மனதுக்குள் எழுந்துள்ளதாம்.



    இதனால் சமீபத்தில் அந்த இரண்டெழுத்து படத்தின் இயக்குனரை பிரம்மாண்ட இயக்குனர் வரவழைத்து ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, உங்கள் படத்தின் புரோமோஷன்களை குறைத்துக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் படத்துக்கு புரோமோஷன் செய்தால் மக்கள் என்னுடைய படத்தை மறந்துவிடுவார்கள் என்று எச்சரித்தாராம்.

    அந்த இரண்டெழுத்து பட இயக்குனரும், பிரம்மாண்ட இயக்குனரின் எச்சரிக்கையை பொறுமையாக கேட்டுக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிவிட்டாராம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலாவது எச்சரிக்கையாக இருந்து படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவந்துவிடாதபடி படப்பிடிப்பை நடத்த அந்த இரண்டெழுத்து பட இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    ×