என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் கொல்கத்தாவைச் சேர்ந்த டெலிவி‌ஷன் நடிகை பலியானார். இந்த வழக்கில் வங்காள நடிகர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சோனிகா சவுகான். டி.வி.யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு இவர் கொல்கத்தாவில் ஒரு ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அதே ஓட்டலில் நடந்த மற்றொரு விருந்தில் கலந்து கொண்ட வங்காள நடிகர் விக்ரம் சட்டர்ஜி காரில் வேகமாக வந்தார்.

    கார் தாறுமாறாக ஓடி நடைபாதையில் சென்றது. இதில் நடந்து சென்ற நடிகை சோனிகா சவுகான் படுகாயம் அடைந்து பலியானார். நடிகர் விக்ரம் சட்டர்ஜியும் காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக நடிகர் விக்ரம் சட்டர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்ததாகவும் அதிவேகமாக கார் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.



    ஆனால் போலீசார் நடிகர் விக்ரம் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தனர். அவரை காப்பாற்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்த நிலையில் சம்பவம் நடந்த 2 மாதத்துக்கு பின்பு இன்று அதிகாலை நடிகர் விக்ரம் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 2 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
    ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்துள்ளது. அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
    நடிகர் ரஜினிகாந்த் 2 மாதங்கள் ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் மும்பையில் விறுவிறுப்பாக நடந்த காலா படப்பிடிப்பில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    ஏற்கனவே ‘கபாலி’ படம் முடிந்தபோதும் அவர் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும், ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் ரஜினிகாந்த் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் முற்றுகையிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அவருடன் செல்பியும் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காரில் பயணித்தபோது ரஜினியே தன்னை செல்பியில் படமாக்கிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள விமான நிலையத்தில் ரசிகைகள் அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.



    மேலும் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் காலா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர்.

    அங்கு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி முடிக்க இயக்குனர் பா.ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார். இந்த வருடம் இறுதியில் ‘காலா’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்தின் தொழில்நுட்ப வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

    இந்த படம் 3டியில் ரூ.400 கோடி செலவில் தயாராகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் ஜப்பான், சீன மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை அக்டோபர் மாதம் துபாயில் நடத்த உள்ளனர். ஜனவரி 25-ந் தேதி 2.0 படம் திரைக்கு வருகிறது.
    கடந்த 2 வாரங்களாக ரிலஸ் ஆன `வனமகன்' மற்றும் `இவன் தந்திரன்' படத்தினை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியான படம் வனமகன். ஜெயம் ரவி - சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்'. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

    அதேபோல் ஆர்.கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் `இவன் தந்திரன்'. கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் - ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    படம் ரிலீசான வாரமே தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2 வாரங்களாக வெளியான படத்தின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், படத்தினை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி படம் மறுபடியும் இன்று ரிலீசாகிறது.
    பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷமி தயாரித்து இருக்கும் 'பண்டிகை' படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை இன்று வெளியிட இருந்தனர்.

    ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று வாபஸ் பெற்றனர்.



    இந்நிலையில், கடந்த வாரம் ரிலீசான படத்தின் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தை ஒருவாரம் தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவன் தந்திரன், யானும் தீயவன், அதாகப்பட்டது மகாஜனங்களே உள்ளிட்ட 6 படங்கள் கடந்த வாரம் ரிலீசாகி இருந்தன. அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பண்டிகை படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இப்படத்தில் சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், ப்ளாக் பாண்டி, சபரிஷ், மதுசூதனன் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. ஆர்.எச்.விக்ரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    நம் அனைவருக்கும் பிரபலமான சூப்பர் ஸ்டார் தெரியும், பவர் ஸ்டார் தெரியும். ஆனால் புதியதாக அவதாரம் எடுத்துள்ள பப்ளிக் ஸ்டார் தெரியுமா?. பப்ளிக் ஸ்டார் பற்றி தெரிய விரும்பினால் தப்பாட்டம் பார்க்க வேண்டும்.
    தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் `தப்பாட்டம்'.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  

    இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.



    இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா. விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.

    டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.

    இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.

    சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.

    இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.

    ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

    தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.

    தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.

    கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.

    ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

    "குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:

    "ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.

    தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''

    இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.

    கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

    `அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.

    அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.

    "ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.

    "பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
    தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    சென்னை:

    மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

    சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனையடுத்து, இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்கள் இடையே கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையிலான பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. 

    இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

    கூட்டத்திற்கு பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் இதனை தெரிவித்தார். 

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன், “திரையரங்குகள் மூடப்பட்டதால் நாளொன்றுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்வது அல்லது குறைப்பது தொடர்பாக இருதரப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் தரப்பில் 8 பேர் உள்ளனர். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் எங்களுடன் உள்ளனர். நாளை முதல் திரையரங்குகள் இயங்கும். பழைய கட்டணமே இருக்கும். ஆனால் அதனுடன் ஜி.எஸ்.டி வரி சேர்த்து வரும்” என்றார்.


    ஜி.எஸ்.டி. வரியுடன் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், சினிமா தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
    சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன், தமிழக அரசின் கேளிக்கை வரியையும் விதிக்க சட்டம் இயற்றப்பட்டது.

    ஜி.எஸ்.டி. வரி ரூ.100-க்கு உட்பட்ட டிக்கெட்டுக்கு 18 சதவீதம், ரூ.100க்கு அதிகமான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 30 சதவீத கேளிக்கை வரியையும் சேர்த்தால் 58 சதவீத வரி செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் டிக்கெட் விலை உயரும், தியேட்டர்களில் கூட்டம் குறையும்.

    அதிக வரி செலுத்த வேண்டியது இருப்பதால் தியேட்டர் வருமானம் குறையும். பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பங்குத் தொகை சிறிய அளவிலேயே கிடைக்கும்.

    இதனால் சினிமா தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கடந்த 3-ந்தேதி தொடங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் 1000 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்கள் மூலம் தினமும் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூல் கிடைக்கும். இன்று 4-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரூ.80 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதவிர தியேட்டர்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். தியேட்டர்களில் ஐஸ்கிரீம், பாப்கான், டீ ஸ்டால்களும் மூடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மால்களில் சினிமா நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கும் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது.

    புதிய படங்கள் தற்போது அதிகபட்சமாக 3 வாரங்கள் ஓடுகின்றன. பல படங்கள் ஒரு வாரத்துக்குள் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன.

    அதற்குள் கிடைக்கும் வருமானம் தான் அந்த தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள், அது ரிலீஸ் ஆன ஒரு வாரத்துக்குள் அதுவும் விடுமுறை நாட்களில்தான் படத்துக்கு போட்ட பணத்தை எடுக்க முடியும்.


    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை 10 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின. அதற்கு முன்பு வந்த 10 படங்கள் குறைந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருந்தன. 3-ந்தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படங்களின் வருமானம் அடியோடு நின்று விட்டன.

    புதிய படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள்தான் ஓடின. இதில் ஓரளவு வருமானம் வந்தது. தொடர்ந்து ஓடினால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று நினைத்த போது தியேட்டர் ஸ்டிரைக் தொடங்கி விட்டது.

    இதுபற்றி கூறிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், புதிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே பெரிய வி‌ஷயம். கஷ்டப்பட்டு தியேட்டரில் இடம் பிடித்தோம். இப்போது அதையும் மூடி விட்டார்கள்.

    இதற்கு முன்பு ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு லாபம் வரும் என்று எதிர் பார்த்த நேரத்தில் தியேட்டர்களை மூடி விட்டார்கள். படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்று தெரியவில்லை.

    58 சதவீத வரி விதிப்பால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பங்கு தொகை பெருமளவு குறைந்து விடும். எனவே, கேளிக்கை வரியை நீக்கா விட்டால் சினிமா துறை அழிந்து விடும். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சினிமா உலகமே தவிப்பதாக கூறினார்கள்.

    சினிமா துறையை நம்பி 1 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. படங்கள் லாபகரமாக அமையாவிட்டால் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள்.


    எங்களுக்கு சினிமா மட்டும்தான் தெரியும். இனி நாங்கள் என்ன செய்வது என புரியவில்லை என்று சினிமா தொழிலாளர்கள் வேதனையுடன் கூறினார்கள். சினிமாவில் பெரிய இடம் பிடிக்கலாம் என்று நம்பி இயக்கம், ஒளிப்பதிவு, நடனம், கலை உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளில் புதிதாக சேர்ந்து இருப்பவர்களும் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கவலையில் மூழ்கி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரை அரங்குகள் மூலம் கிடைக்கும் கேளிக்கை வரிதான் முக்கிய வருமானமாக இருந்தது. இப்போது நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே ‘கேளிக்கை வரியை நீக்க வேண்டும். இல்லையென்றால் தியேட்டர்களை திறக்க மாட்டோம்’ என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்து விட்டனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பதால் பிராந்திய மொழி படங்களுக்கு கிடைத்த சலுகைகள் பாதிக்கப்பட்டு விட்டன.

    எனவே தியேட்டர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடர்கிறது. இதனால் சினிமா தியேட்டர்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரி வருமானம் அடியோடு நின்று விட்டது. இதனால் தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை திரை உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் தவிப்புடன் காத்து இருக்கிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் கோவை மண்டலத்தில் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வரிகள் மூலம் சுமார் ரூ.2 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கோவை மண்டலத்தில் மட்டும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மண்டலத்தில் 150 திரைப்பட வினியோகஸ்தர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
    நடிகை பாவனாவின் திருமணத்தை நிறுத்தவே அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானார். அதை அவர்கள் தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து கொண்டனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கடத்தல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட போது எடுத்த வீடியோ பதிவை திலீப்பின் 2-வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனி, கடிதம் ஒன்றில் கூறியிருந்தான். அதன்பேரில் போலீசார் காவ்யா மாதவனின் கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர்.



    இதைப்போல திலீப்புக்கு பல்சர் சுனியுடன் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களை கைப்பற்றிய போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவங்களால் போலீசாரின் பார்வை தற்போது நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் மீது திரும்பி உள்ள நிலையில், பாவனா கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாவனாவின் திருமணத்தை தடுக்கவே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    பல்சர் சுனியை இந்த கடத்தலுக்கு தூண்டியவர்கள், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போது அவரது அலங்கோலமான நிலையை வீடியோவில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாவனாவின் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.



    எனவே இந்த கடத்தலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? பாவனாவின் திருமணத்தை தடுப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த கேள்விகளுக்கான விடைகள் விரைவில் கண்டறியப்படும் என கூறிய போலீசார், அதைத்தொடர்ந்து பாவனா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    மேலும் இந்த வீடியோ பதிவுகளை வைத்து பாவனாவிடம் பணம் கேட்டு மிரட்ட பல்சர் சுனியும் திட்டமிட்டுள்ளான். அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே சிறையில் இருந்தபடியே தொலைபேசி மூலம் திரைப்படத்துறையினரை மிரட்டியதாக பல்சர் சுனியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இது தொடர்பாக காக்கநாடு சிறையில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பல்சர் சுனி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பல்சர் சுனிக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய பல்சர் சுனி, பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளிகள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடப்போவதாக கூறினார்.
    சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அவருடைய நினைவுநாளான வருகிற 21-ந் தேதி திறக்க ஏற்பாடு நடக்கிறது.
    தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.

    பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனை யடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.

    பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலையை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

    அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது.



    சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று ரசிகர்களும், சிவாஜி சமூக நலப் பேரவையினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சிவாஜி கணேசனின் 16-ம் ஆண்டு நினைவுதினம் வருகிற 21-ந் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

    எனவே அன்றைய தினம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்-நடிகைகளும் கலந்துகொள்ள உள்ளனர். அமிதாப் பச்சன் போன்ற பிற மாநில நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்க சிவாஜி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.


    திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை படத்தில் காணலாம்.

    சிவாஜி மணிமண்டபம் திறக்கப்படுவது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது. வர்ணம் பூசும் பணியும், சிவாஜி கணேசன் சிலையை வைப்பதற்கான பீடம் அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அந்த பணிகளும் ஒரு சில நாட்களில் நிறைவடைந்துவிடும்.

    சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் அவர் நடித்த திரைப்படங்களின் பெயர்கள், அவர் பெற்ற விருதுகள், அரிய புகைப்படங்கள் இடம்பெறும்’ என்றார்.

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மணிமண்டபத்தில் நிறுவ அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்த பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறும்போது, ‘மெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை, கண்ணகி, காந்தி சிலைகள் அமைந்துள்ள வரிசையில் நிறுவ வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்’ என்றார்.
    தியேட்டர் அதிபர்கள் சமரச பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் திரையரங்குகளை மூடும் போராட்டம் நீடிக்கிறது. 3-வது நாளாக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
    தமிழக அரசு சினிமா மீது விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ந்தேதி முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன.

    நேற்று(புதன்கிழமை) 3-வது நாளாக தமிழகம் முழுவதும் உள்ள 1000 தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. நகர பகுதிகளில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கவில்லை. இதனால் ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.

    தமிழ் திரைப்பட வரலாற்றில் இத்தனை நாட்கள் தியேட்டர்களை தொடர்ந்து மூடியது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார்.

    தியேட்டர்களை மூடியதால் ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருந்த 10 படங்கள் நிறுத்தப்பட்டு அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    நாளை(வெள்ளிக்கிழமை) திரி, நிரஞ்சனா, கில்லாடிதாஸ் ஆகிய படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டு விளம்பரப்படுத்தி இருந்தனர். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், சிவாஜி கணேசன் நடித்த எங்க மாமா ஆகிய படங்களும் நாளை திரைக்கு வருவதாக இருந்தது.



    தியேட்டர்கள் ஸ்டிரைக் நீடித்தால் இந்த படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையங்கு உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, தமிழ் திரைப்பட வர்த்தகசபை ஆகிய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அமைச்சர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது திரையுலகினர் சார்பில் கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் 15 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
    மலேசிய தமிழ் தொழிலாளர்கள் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘தோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    புளு ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இதில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.

    நாயகியாக தனா, விவியாஷான் என்ற சீன நடிகை நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில் வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சதீஷ் பி சரண், இசை - சாய், பாடல்கள் - நா.முத்துக்குமார், அண்ணாமலை மாணிக்க சண்முகம், எடிட்டிங் - வினோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அரங்கண்ணல் ராஜ்.



    படம் பற்றி இயக்குனர் கூறும் போது...

    “ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டுதான். இலங்கை, மலேசியா உள்பட எல்லா நாடுகளும் இதில் அடங்கும்.

    அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளிகள் பெரும்பாலும் இந்தியர்களே, அதிலும் குறிப்பாக தமிழர்களே... அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகிவிட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கைமாறிவிட்டது. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினையை இதில் அலசியிருக்கிறோம்.

    அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ் பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக வி‌ஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.

    மலேசிய நடிகர், நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம்.

    விரைவில் உலக மெங்கும் தோட்டம் வெளியாகிறது” என்றார்.
    ×