என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் - நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும்
    X

    திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் - நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும்

    தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    சென்னை:

    மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

    சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனையடுத்து, இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்கள் இடையே கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையிலான பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. 

    இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

    கூட்டத்திற்கு பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் இதனை தெரிவித்தார். 

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன், “திரையரங்குகள் மூடப்பட்டதால் நாளொன்றுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்வது அல்லது குறைப்பது தொடர்பாக இருதரப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் தரப்பில் 8 பேர் உள்ளனர். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் எங்களுடன் உள்ளனர். நாளை முதல் திரையரங்குகள் இயங்கும். பழைய கட்டணமே இருக்கும். ஆனால் அதனுடன் ஜி.எஸ்.டி வரி சேர்த்து வரும்” என்றார்.


    Next Story
    ×