தொழில்நுட்பம்

கூகுள் பங்குகளில் இருந்து மட்டும் சுமார் 2500 கோடி பெறுகிறார் சுந்தர் பிச்சை

Published On 2018-04-24 07:10 GMT   |   Update On 2018-04-24 07:10 GMT
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட நிறுவன பங்குகள் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2500 கோடி கிடைத்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவர் தமிழர் ஆவார்.

இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அவருக்கு ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது. கூகுள் நிறுவன விதிமுறைப்படி அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்க முடியாது.

சுந்தர் பிச்சைக்கு பங்குகள் வழங்கப்பட்டு நாளையுடன் ( ஏப்ரல் 25-ந்தேதி) 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் அந்த பங்குகள் மீதான முழு உரிமையும் சுந்தர் பிச்சை வசமாகிறது. இனி அவர் அந்த பங்குகளை விற்க முடியும்.

2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.2,508 கோடி ஆகும். எனவே பங்கு தொகையாக சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி கிடைத்துள்ளது. சமீப காலங்களில் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது ஊழியருக்கும் வழங்கும் அதிகபட்ச தொகையாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்டு 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தன் நிறுவன பங்குகள் மூலம் 227 கோடி அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தார். இதே போன்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் 2016-ம் ஆண்டு 134 கோடி அமெரிக்க டாலர்களை பெற்றார். 

2015 மற்றும் 2016-ம் ஆண்டிலும் சுந்தர் பிச்சைக்கு பல பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. 2017-ம் ஆண்டிற்கான பங்கு மதிப்புகளை கூகுள் இதுவரை அறிவிக்கவில்லை.
Tags:    

Similar News