செய்திகள்
தை அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2020-01-24 05:55 GMT   |   Update On 2020-01-24 07:42 GMT
தை அமாவாசையான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் வருடத்தில் தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

தை அமாவாசையான இன்று ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ரெயில், பஸ், வேன், கார் மூலமாக வந்த வண்ணம் இருந்தனர்.

அமாவாசையான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

திதி கொடுத்தபின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர்.

முன்னதாக இன்று காலை ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சுவாமி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பக்தர்களின் தேவைகளுக்காக அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

ராமேசுவரத்தில் இருந்து ஊர் திரும்புவதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் சேதுக்கரை, திருப்புல்லாணியில் ஏராளமான பக்தர்கள் திதி கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடி தரிசனம் செய்தனர்.

மதுரை வைகை ஆற்றிலும் பலர் திதி கொடுத்து வழிப்பட்டனர். இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
Tags:    

Similar News