உலகம்
இலங்கை பாராளுமன்றம்

பாகிஸ்தானில் சிங்களர் படுகொலை... இலங்கை பாராளுமன்றம் கண்டனம்

Published On 2021-12-04 16:29 GMT   |   Update On 2021-12-04 16:29 GMT
பாகிஸ்தானில் உள்ள எஞ்சிய இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
கொழும்பு:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக  கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த படுகொலைக்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ச கண்டனம் தெரிவித்து பேசுகையில், இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கும், இலங்கையின் பிற தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியான நடவடிக்கை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள எஞ்சிய இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த படுகொலை தொடர்பாக 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள பாகிஸ்தான் காவல்துறை கூறி உள்ளது.
Tags:    

Similar News