செய்திகள்
கோப்புப் படம்

இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு

Published On 2021-08-06 00:21 GMT   |   Update On 2021-08-06 00:21 GMT
தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாட்டில் ஒரு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள், இங்கிலாந்து நாட்டுக்குச் செல்கிறபோது அவர்கள் 10 நாட்கள் ஓட்டலில் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு அமலுக்கு வருகிறது.

இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து மந்திரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:



ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் இருந்து பொன்னிற பட்டியலுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் 8-ம் தேதி காலை 4 மணிக்கு அமலுக்கு வருகிறது. நாம் எச்சரிக்கையான அணுகுமுறையை தொடர்கிறபோது, மக்கள் உலகளவில் தங்கள் குடும்பங்களோடும், நண்பர்களோடும், தொழிலுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிற வகையில், மேலும் பல இடங்களைத் திறந்து விடுவது சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது. நமது வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பொன்னிற பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாடுகளுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து சென்றபின் 2 கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ள வேண்டும், பயணி இருப்பிடம் அறியும் லொகேட்டர் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News