செய்திகள்
ரணில் விக்ரமசிங்க

இலங்கை வரலாற்றில் சாதனை... 9வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க

Published On 2021-06-23 16:06 GMT   |   Update On 2021-06-23 16:06 GMT
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 2020 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
கொழும்பு:

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 9வது முறையாக எம்பியாக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் 1977ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் எம்பியாக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

1977ஆம் ஆண்டு முதன் முறையாக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட ரணில் விக்ரமசிங்க, 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றார். நான்கு முறை பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 



ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 2020 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ரணில் விக்ரமசிங்கவும் தோல்வி அடைந்தார். எனினும், கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கேற்ப தேசிய பட்டியலிருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, இன்று பதவியேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசை குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News