செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி

ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு ஜாமீன்

Published On 2021-02-04 19:28 GMT   |   Update On 2021-02-04 19:28 GMT
ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 65). இவர் போலி வங்கிக்கணக்கு மூலமாக ரூ.800 கோடியை சந்தேகத்துக்கு இடமான வகையில் போலி வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பதாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்.அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை நீதிபதிகள் அமீர் பாரூக், மோசின் அக்தர் கயானி ஆகியோர் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது ஊழல் தடுப்பு அமைப்பின் வக்கீல் சர்தார் முசாப்பர் அப்பாசி வாதிடுகையில், இந்த வழக்கில் குறிப்பு கோப்பு இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையில் உள்ளது என குறிப்பிட்டார். சர்தாரியின் வக்கீல் பாரூக் நாயக் வாதிடும்போது, இந்த வழக்கில் சர்தாரி கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக காவலில் உள்ளார். அவரிடம் ஊழல் தடுப்பு அமைப்பு இந்த காலகட்டத்தில் விசாரணை நடத்தி இருக்க முடியும். சர்தாரி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார் என்று கூறினார்.

இதற்கிடையே சர்தாரியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்திய கமிஷனின் அறிக்கை, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஊழல் தடுப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதையடுத்து உடல்நலத்தை காரணம் காட்டி சர்தாரிக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News