செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்ட அர்ஜென்டினாவில் பணக்காரர்களுக்கு சிறப்பு வரி

Published On 2021-01-31 08:54 GMT   |   Update On 2021-01-31 08:54 GMT
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி திரட்ட பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

புவெனஸ்ஐரிஸ்:

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு இதுவரை 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே அரசு திணறி வருகிறது. மேலும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதனை சீர்செய்வதற்காக அர்ஜென்டினாவில் பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்தது.

மருத்துவ பொருட்கள் வாங்கவும், சிறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டு 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 சதவீத வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரியும் செலுத்த உத்தரவிட்டு இருக்கிறது.

மில்லியனரின் வரி என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்த மசோதா கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அமலுக்கு வந்து இருக்கிறது.

Tags:    

Similar News