செய்திகள்
ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப்

டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டம் நீடிப்பு... துணை அதிபர் மைக் பென்ஸ் கண்டனம்

Published On 2021-01-07 03:29 GMT   |   Update On 2021-01-07 03:29 GMT
அமெரிக்காவில் பாராளுமன்ற முற்றுகையை பாதுகாப்பு படையினர் முறியடித்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

குறிப்பாக, தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகள் ஆதரவுடன் கூடிய சான்றை வழங்கும் நடைமுறை, வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. இதற்காக துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.

அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். 

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. 

இதனையடுத்து தேர்தல் சபை வாக்குகளுடன்கூடிய வெற்றி சான்றிதழ் வழங்குவதற்கான எம்பிக்கள் கூட்டம் மீண்டும் தொடங்கியது.

இது ஒருபுறமிருக்க, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் டிரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

‘கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒழுங்காகவும் அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்றும் மோடி கூறி உள்ளார்.

வன்முறை போராட்டங்கள் குறித்து ஜோ பைடனும் கடும் அதிருப்தி தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்பதை இன்றைய சம்பவம் நினைவுபடுத்தி உள்ளது. இது வேதனையானது. பொது நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க நல்ல எண்ணம் கொண்ட மக்கள், தைரியமான தலைவர்கள் தேவை’ என கூறி உள்ளார்.
Tags:    

Similar News