செய்திகள்
பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலனை

Published On 2020-10-31 20:10 GMT   |   Update On 2020-10-31 20:10 GMT
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருகிறார்.
லண்டன்:

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இங்கு நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 405 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி 46 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே லண்டனில் வெளியாகும் ‘தி டைம்ஸ் ஆப் லண்டன் நாளேடு’ வெளியிட்ட செய்தியில், “வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் ஒரு மாதம் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்தும் மூடப்படலாம். மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பள்ளிகள் திறந்திருக்கும். மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்று அறிவிக்கப்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முழு ஊரடங்கு குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News