செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்கு கொரோனா?

Published On 2020-10-17 01:08 GMT   |   Update On 2020-10-17 01:08 GMT
ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற டிரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பிடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. 

இதையடுத்து ஜோ பிடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரச்சாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்தார். மேலும் ஜோ பிடன் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவரது மருத்துவர்கள் தெரிவித்ததாக ஜென் டில்லேன் கூறினார்.

ஏற்கனவே, ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரச்சார குழுவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News