செய்திகள்
துபாய் முதலீட்டு பூங்கா மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள இடவசதியை படத்தில் காணலாம்.

புதிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் சில்லரை வர்த்தகம்

Published On 2020-10-13 08:48 GMT   |   Update On 2020-10-13 08:48 GMT
துபாயில் உலக கண்காட்சிக்கு செல்லும் ரூட் 2020 வழித்தடத்தில் உள்ள புதிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சில்லரை வர்த்தகங்களை தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துபாய்:

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் முதலீட்டு பூங்கா அருகே உலக கண்காட்சியான எக்ஸ்போ 2020 நடைபெற இருந்தது. ஏற்கனவே இந்த கண்காட்சி 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உலக கண்காட்சியானது வருகிற 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறும் என மறுதேதி அறிவிக்கப்பட்டது.

இந்த பிரமாண்டமான உலக கண்காட்சியை முன்னிட்டு அந்த பகுதியில் பிரமாண்டமான கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த உலக கண்காட்சி நடைபெற உள்ள இடத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வருவதற்காக துபாய் மெட்ரோ ரெயில் வழித்தடமானது 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரூட் 2020 வழித்தடமானது ஜுமைரா லேக் பகுதியை ஒட்டிய நகீல் துறைமுகம் மற்றும் டவர் பகுதியில் இருந்து உலக கண்காட்சி நடைபெறும் இடம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் நகீல் துறைமுகம், தி கார்டன்ஸ், டிஸ்கவரி கார்டன்ஸ், அல் புர்ஜான், ஜுமைரா கோல்ப் எஸ்டேட்ஸ், துபாய் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் மற்றும் எக்ஸ்போ 2020 வளாகம் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோல்ப் எஸ்டேட் மெட்ரோ ரெயில் நிலையம் 3 லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரியதாக உள்ளது.

தற்போது இந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சில்லரை வர்த்தகத்திற்கு முதலீடுகள் செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது. மெட்ரோ நிலையத்தின் உள்ளே பல்பொருள் விற்பனை கடைகள், உணவகம், பணப்பரிமாற்ற மையம், காபி கடைகள் உள்ளிட்டவைகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். அந்தந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடைகளுக்கான இடத்தை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்பந்தத்தின் பேரில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News