செய்திகள்
கோப்பு படம்

ரஷியா: கொரோனாவுக்கான மேலும் ஒரு தடுப்பூசி - மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

Published On 2020-08-21 23:49 GMT   |   Update On 2020-08-21 23:49 GMT
ரஷியாவில் கொரோனா வைரசுக்கு மேலும் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மாஸ்கோ:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்து விட்டதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ந் தேதி அறிவித்து உலகை அதிர வைத்தார்.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்துடன், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஷியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியை வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படும் ரஷிய அரசின் வைராலஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இதை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு, ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக 14 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டாவது கட்டமாக 43 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடைபெற்றது.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் நல உடல்நலத்துடன் இருப்பதாக ரோஸ்போடிரெப்நட்சார்  தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் வெற்றியடையும் பட்சத்தில் கூடிய விரைவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை ரஷியா அறிமுகம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 






Tags:    

Similar News