செய்திகள்
டொனால்டு டிரம்ப்

கொரோனா பற்றிய தவறான தகவல்: டிரம்பின் ‘பேஸ்புக்’ பதிவு நீக்கம் - டுவிட்டரும் நடவடிக்கை

Published On 2020-08-07 00:00 GMT   |   Update On 2020-08-07 00:00 GMT
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான டிரம்பின் தவறான தகவல் பதிவை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்தது.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் ‘பாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார்.அப்போது அவர், “நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்த பேட்டி அடங்கிய வீடியோ தொகுப்பை அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அதை ‘பேஸ்புக்’ நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “இந்த வீடியோவில் மக்களில் ஒரு பிரிவினர் (குழந்தைகள்) கொரோனாவில் இருந்து எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறார்கள் என்ற தவறான கருத்து இடம் பெற்றுள்ளது. இது தீங்கு விளைவிக்கும். மேலும், கொரோனா பற்றிய தவறான தகவல்கள் குறித்த எங்கள் கொள்கைகளையும் மீறுவதாகும்” என கூறினார்.

டிரம்ப் மீது டுவிட்டரும் நடவடிக்கையில் இறங்கியது. சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை அகற்றும் வரையில் டிரம்ப் பிரசார கணக்கை முடக்குவதாக டுவிட்டரும் கூறி உள்ளது. இது பற்றி டுவிட்டர் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ ஜனாதிபதி டிரம்பின் பதிவு, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தவறான தகவல்கள் பற்றிய எங்கள் கொள்கையை மீறுவதாகும். இந்த பதிவை அவர் திரும்பப்பெற வேண்டும். அதன்பின்னர்தான் இனி அவர் பதிவிட முடியும்” என தெரிவித்தார்.

பின்னர் அந்த பதிவு திரும்பப்பெறப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதே நேரத்தில் அமெரிக்காவின் பொது சுகாதார நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News