செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: ஜெர்மனி வேண்டுகோள்

Published On 2020-07-28 15:20 GMT   |   Update On 2020-07-28 15:20 GMT
ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பெர்லின்:

உலகம் முழுவதும் சுமார் 1 .6 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஊரடங்கை ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஜெர்மனியில் இன்று 633 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 2,07,416 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஸ்பெயினில் கேட்டலோனியா, அரகான், நவ்அர்ரா ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீப நாட்களாக அங்கு தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News