செய்திகள்
டாக்டர்

துபாயில் இந்திய பெண் டாக்டருக்கு போலீஸ்காரர் கவுரவம்

Published On 2020-04-30 06:23 GMT   |   Update On 2020-04-30 06:23 GMT
துபாயில் இந்திய பெண் டாக்டர் அளித்த கொரோனா சிகிச்சையை பாராட்டி, அவரை நடுரோட்டில் போலீஸ்காரர் கவுரப்படுத்தினார்.
துபாய்:

துபாயில், அல் அஹ்லி ஆஸ்பத்திரியில் பெண் டாக்டராக பணியாற்றி வருபவர், ஆயிஷா சுல்தானா. இவர், இந்தியாவில் ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர்.

ஆனால், துபாயிலேயே பிறந்து வளர்ந்தார். அங்கேயே மருத்துவ கல்லூரியில் படித்தவர். துபாயில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதற்காக பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டாக்டர் ஆயிஷா சுல்தானா, ஆஸ்பத்திரி பணி முடிந்து தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், துபாய்-சார்ஷா நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அந்த காரை நிறுத்தினார்.

காரில் இருந்து இறங்கிய பெண் டாக்டருக்கு போலீஸ்காரர் வணக்கம் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த டாக்டர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்த கவுரவத்தை அளித்தார்.

இதுகுறித்து துபாய் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆயிஷா சுல்தானா கூறியதாவது:-

போலீஸ்காரர், காரை நிறுத்தியவுடன் முதலில் திடுக்கிட்டேன். நான் டாக்டர் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களையும், அடையாள அட்டை, ஒர்க் பெர்மிட்டையும் எடுத்தேன்.

ஆனால், அவர் எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை என்று கூறி, எனக்கு வணக்கம் தெரிவித்தார்.

அதைக்கண்டு எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. அந்த நேரத்தில் உணர்ச்சி மிகுதியால், என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. எனது களைப்பு எல்லாம் நீங்கிவிட்டது.

ஆனால், முக கவசம் அணிந்திருந்த அந்த போலீஸ்காரரின் முகத்தையும், பெயரையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு நன்றி.

நான் மருத்துவ படிப்பை முடித்தபோது, கொரோனாவை கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றே நான் நினைக்கவில்லை. இதுதான் என் ஊர். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த என்னால் இயன்ற அளவு பாடுபட விரும்புகிறேன்.

கொரோனா அறிகுறியுடனும், இல்லாமலும் தினமும் வரும் 200, 300 பேர்வரை கவனிக்கிறேன். ஐக்கிய அரபு அமீரக குடிமகளாக இருந்து, இப்பணியில் ஈடுபடுவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News