செய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்

Published On 2020-04-06 20:08 GMT   |   Update On 2020-04-06 20:08 GMT
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லண்டன்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. 

இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 
Tags:    

Similar News