செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் மக்கள்

கொரோனா பன்மடங்கு பெருகுகிறது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Published On 2020-04-02 00:09 GMT   |   Update On 2020-04-02 00:09 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பன்மடங்கு பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் விகிதமும், உயிரிழப்பும் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் பேசியதாவது:-

''கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4-வது மாதத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், வைரஸ் அதி தீவிரமாக உலகம் முழுவதும் பரவும் நிலையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். 

கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதை நாம் உணர்கிறோம். 



வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிடுவது மட்டுமல்லாமல் உயிரிழப்பும் 50 ஆயிரத்தை தொட்டு விடும்.

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதும் அப்பகுதிகளில் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் வைரசால் மிகவும் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். 

இந்த நாடுகளில் கொரோனாவை கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்தவும் தேவையான உபகரணங்கள் உள்ளது என்பதை உறுதி செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   
Tags:    

Similar News