செய்திகள்
இம்ரான் கான், மோடி

மோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்

Published On 2020-03-31 09:45 GMT   |   Update On 2020-03-31 09:45 GMT
இந்திய பிரதமர் மோடி பேசியதை திரித்து தவறான பொருள்படும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை, பாகிஸ்தான் ஊடகம் சுட்டிக்காட்டி திருத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் தவிர பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்தியா போன்ற 130 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் மோடி கூறினார். 

இந்நிலையில் கொரோனா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டார். அதனால்தான் பாகிஸ்தானில் நாடுதழுவிய ஊரடங்கை அமல்படுத்துவது மோசமான யோசனை என நினைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

ஆனால் இம்ரான் கான் கூறியது தவறு எனவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகமான ‘ஜியோ நியூஸ்’ சுட்டிக் காட்டியது. மேலும் ஊரடங்கு உத்தரவு, சிந்திக்காமல் எடுத்த முடிவு என  மோடி கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தியது. 
Tags:    

Similar News